கோவையில் மதுக்கரை குரும்பபாளையம் தடுப்பணையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மதுக்கரை கடைவீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி மைதிலி. இவர்களது மகன் சுரேந்திரன் (15), மதுக்கரை அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால், மைதிலி வேறு திருமணம் செய்து கொண்டார். இதனால், மகன் சுரேந்திரன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தான். இந்நிலையில், இன்று மதியம் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான தாணிஸ்வரன் (13), யஸ்வந்த் (13) ஆகியோருடன், மதுக்கரை அடுத்த குரும்பபாளையம் பகுதியில் உள்ள மஞ்சப்பள்ளம் தடுப்பணையில் குளித்து விளையாடச் சென்றுள்ளான்.
அப்போது, சுரேந்திரனுக்கு நீச்சல் தெரியாததால் ஆழமுள்ள பகுதியில் விளையாடிய போது நீரில் மூழ்கியுள்ளான். இதை பார்த்த உடன் சென்ற சிறுவர்கள் சத்தம் போட்டதால், அங்கிருந்தவர்கள் வந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டனர். ஆனால், அதற்குள் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார் சிறுவன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.