தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்பில் உரிமை மீறல் நடந்திருப்பதாக M.Sc.(Agriculture) Environmental Science பட்டதாரிகள் நீதிமன்றம் வரை சென்று போராடிய நிலையில், தற்போது தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: நீதியும் அறமும் வெல்லும் என நம்பிக்கையுடன் எதிர் நோக்கி காத்திருக்கிறோம் - M.Sc.(Agriculture) சுற்றுச்சூழல் அறிவியல் (Environmental Science) மாணவர்கள்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்பில் உரிமை மீறல் நடந்திருப்பதாக M.Sc.(Agriculture) Environmental Science பட்டதாரிகள் நீதிமன்றம் வரை சென்று போராடிய நிலையில் தற்போது தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "நாங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் M.Sc.(Agriculture) சுற்றுச்சூழல் அறிவியல் (Environmental Science) படித்தவர்கள். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி பணிக்கு விண்ணப்பித்து, நல்ல மதிப்பெண்ணும் பெற்றிருந்த நிலையில் எங்களை வாரியம் தொடர்ந்து புறக்கணித்தது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை கணக்கில் கொள்ளாமல் அவசர அவசரமாக ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பட்டியலை வெளியிட்டது. இதனால், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்பில் உரிமை மீறல்-சமூக நீதி மறுப்பு நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து, ஆரம்பம் முதலே ஏற்கனவே முதல்வரின் தனிப்பிரிவில் கோரிக்கை விடுத்திருந்தோம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்பு குறித்து குறைத்தீர்க்க வேண்டுகிறோம்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் விஞ்ஞானி பதவிகளுக்கான ஆட்சேர்ப்புகாக இரண்டு அறிவிப்புகளை (No. 01/2019 Dated: 06.03.2019, No. 02/2019 Dated: 05.03.2020) வெளியிட்டது. மேலும் அதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 11, 2020 அன்று நடைபெற்றது.
பின்னர் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் நேர்காணலுக்காகவும் நாங்கள் அழைக்கப்பட்டோம். முதற்கட்ட நேர்காணலானது நவம்பர் 17, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது.
சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள Master of Science in Environmental Science பட்டத்திலிருநது எங்களது பட்டமான (Master of Science (Agriculture) Environmental Science) வேறுபடுகிறது எனக் கூறினார்கள். ஆனால், இரண்டும் ஒரே பட்டம் தான். பாடத்திட்டமும் கூட ஒன்றே தான், வேளாண் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பட்டம் என்பதால் தான் எங்களுக்கு இப்பட்டததின் முன்னொட்டில் Agriculture எனச் சேர்க்கப்பட்டுள்ளது.
மற்றபடி நாங்கள் படித்த துறை தான் எனக்கூறி அதற்கான சான்றுகளாகத தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (TamilNadu Agricultural University - Registrar) வழங்கிய நிகர் சான்றிதழையும், ஒன்றிய அரசின் வேளாண் மற்றும் உழவர்கள் நல அமைச்சகத்தின் கீழ் இயஙகும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக கழகத்தின் (Indian Council of Agricultural Research) ஆவணங்களையும் நாங்கள் சமர்பித்தோம்.
இருப்பினும், எங்களது பட்டமான (Msc. (Agriculture) Environmental Science)-ஐ தகுந்த பட்டமாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் விளைவாக நேர்காணலில் கலந்து கொள்ளவும் எங்களை அனுமதிக்கவில்லை.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எம்.எஸ்சி. சுற்றுச்சூழல் அறிவியல் (M.Sc. Environmental Science) என்னும் இரண்டு ஆண்டு பட்டமேற்படிப்பை 1989 முதல், தமிழ்நாட்டின் மற்ற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி. சுற்றுச்சூழல் அறிவியல் பட்டத்திற்கு சமமான பாடத்திட்ட கட்டமைப்போடு வழங்கி வருகிறது.
1989 முதல் 2015 வரை இந்தப் பட்டமானது M.Sc. Environmental Science என்ற பெயரோடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வழங்கி வந்தது. 2012 ஆம் ஆண்டில், ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் ICAR-ன் விதிமுறைகளின்படி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டு வந்த அனைத்து பட்டங்களுக்கும் பட்டத்தின் பின்னால் Agriculture என்ற சொல்லும் சேர்க்கப்பட்டது (உதாரணமாக M.Sc Environmental Science என்றிருநத பட்டம் M.Sc. (Agriculture) Environmental Science என்று மாற்றப்பட்டது.
எனினும், பாடத்திட்டம் அப்படியே தான் இருந்தது. 2016 ஆம் ஆண்டிலிருந்து படிப்பை முடித்த மாணவர்கள் அனைவருக்கும் M.Sc. (Agriculture) Environmental Science என்ற பட்டமே தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானிக்களுக்கான இதே நேர்காணலில் எங்களது பல்கலைக்கழகத்தில் படித்த M.Sc. Environmental Science பட்டம் பெற்ற மூத்த மாணவிகள் இருவரும், மாணவர் ஒருவரும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், M.Sc. (Agriculture) Environmental Science என்ற பட்டத்தை அதே வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பெற்றிருந்த எங்களை அனுமதிக்க மறுத்தனர் (தற்போது மூவரும் பணி நியமன ஆணையும் பெற்று மாசு கட்டுபாடு வாரியத்தில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து தேர்வில் நாங்கள் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த போதும், நேர்காணலில் எங்களை அனுமதிக்காததால் வேறு வழியின்றி பட்டத்திற்கான நிகர் சான்று (Degree Equivalence) வேண்டி தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தையும் (TANSCHE), நீதி வேண்டிச் சென்னை உயர்நீதிமன்றத்தையும் நாடினோம்.
இதுகுறித்து, முன்னாள் முதலமைச்சரின் சிறப்பு தனிப்பிறிவுக்கு கடந்த 2020 நவம்பர் மாதத்தில் எஙகளது குறைகளைத தீர்க்க வேண்டி நாங்கள் அனைவரும் தனித் தனியாக கோரிக்கை வைத்திருந்தோம்.
சென்னை உயர்நீதிமன்றம் இது சம்பந்தமாக, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு (TANSCHE) எங்களது பட்டம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சுறறுச்சூழல் விஞ்ஞானி பணியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த பட்டமான M.Sc. Environmental Science பட்டத்திற்கு நிகரானது தானா? என்று ஆராய குழு ஒன்றையும் அமைத்துப் பாடத்திட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு வலியுறுத்தியது.
அதன்படி தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் ஆய்வு செய்து, தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் வாயிலாக அரசாணை (எண் 29, தேதி 09.02.2021) ஒன்றை வெளியிட்டது. மேற்குறிப்பிட்ட, அரசாணையின்படி எங்களது பட்டமும், சுற்றுச்சூழல் விஞ்ஞானி பதவிக்குத் தகுதியானது தான் என்று நிருபணமாகியது.
அதன் விளைவாக, சென்னை உயர்நீதிமன்றம் கீழ்கண்டவாறு எங்களது வழக்கில் இறுது தீர்ப்பளித்தது. இதன் விளைவாக, 02.03.2021 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி எஸ். வைத்தியநாதன் அமர்வு தற்போதைய அறிவிப்பில் சுற்றுச்சூழல் விஞ்ஞானி பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு எங்களைப் பரிசீலிக்க TNPCBக்கு உத்தரவிட்டது (நகல் இணைக்கப்பட்டுள்ளது).
இனி எந்தவொரு இடையூறும் இல்லை எனவும், ஆட்சேர்ப்பு பணிகளைத் தொடரவும், விரைந்து முடிக்கவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஆயினும்கூட, இன்றுவரை நாங்கள் நேர்காணலுக்கு அழைக்கபபடவில்லை. மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் 30.04.2021 அன்று இரண்டாவது சுற்று நேர்காணலை நடத்தியது, அதற்கும் நாங்கள் அழைக்கப்படவில்லை.
இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் தலைவருக்கும், சுற்றுச்சூழல் துறை செயலர், சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கும் கடிதங்களும், மின்னஞ்சல்களும் அனுப்பியும் எந்தவித பதிலும் வரவில்லை. கூடுதலாக, ஆட்சேர்ப்பு குறித்து நிலுவையில் இருந்த மற்ற பிற வழக்குகள் 21.04.2022 அன்ற முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது (இணைப்பு எண். 4. நகல் இணைக்கபபட்டுள்ளது).
வழக்குகள் முடிவுக்கு வந்த நிலையில், எங்களை நேர்முகத் தேர்விற்கு வாரியம் அழைக்கும் என எண்ணியிருந்தோம், இருந்தபோதும் மாசு கட்டுபாடு வாரிய தலைமை அலுவலகத்திற்கு எங்கள் பல்கலைக்கழகப் பதிவாளர் மின்னஞ்சல் வாயிலாகவும், தபால் வாயிலாகவும் எங்களுக்கு நேர்முகத் தேர்வை நடத்த கோரிக்கை விண்ணபபம் விடுத்தார்.
எங்களில் சில பட்டதாரிகள் தபால் மூலமாகவும், 25.04.2022 அன்று நேரடியாகவும் மாசு கட்டுபாடு வாரிய தலைமை அலுவலகத்திற்குச் சென்று எங்களது வழக்கிற்கான உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலைக் காண்பித்து வாரியம் எப்போது எங்களுக்கு நேர்முகத தேர்வு நடத்தப்போகிறது என அதிகாரிகளுடன் பேச சென்றிருந்தோம், எங்களை அனுமதிக்கவில்லை.
அடுத்த நாள் 26.04.2022 மீண்டும் மாசு கட்டுபாடு வாரிய தலைமை அலுவலகத்திற்குச் சென்றோம் நீண்ட நேரத்திற்குப் பின் உறுப்பினர் செயலாளர் (TNPCB Member secretary) அவர்களைச் சந்தித்துப் பேசினோம், எங்களது தீர்ப்பு குறித்து அவருக்கு எதுவும் தெரியாது எனவும், அடுத்த முறை தேர்வு வரும் அதற்கு மீண்டும் விண்ணப்பித்து எழுதிக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.
இது குறிதது முதல்வர், தலைமை செயலாளர், சுற்றுச்சூழல் துறை செயலர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆகியோரையும் சந்திக்க கடந்த 26.04.2022 அன்று காலை முதலே தலைமைச் செயலகம் வந்திருந்தும் பார்க்க இயலவில்லை.
26.04.2022 அன்று மாலை 23 மணிக்கு மாசு கட்டுபாடு வாரியத்தின் தலைவரை சந்திக்க முன் அனுமதி பெற்றிருந்தும் எங்களை அனுமதிக்கவில்லை, இப்போது பார்க்க முடியாது எனக் கூறி காக்க வைத்தனர், அடுத்த அரை மணி நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் எங்களுக்குச் சாதகமாக அளித்திருந்த தீர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் சறியாக 5.32 மணியளவில் அவசர அவசரமாக ஏற்கெனவே, தயாரித்து வைத்திருந்த நியமன பட்டியலை மாசு கட்டுபாடு வாரியம் வெளியிட்டது. அந்த நொடி எங்கள் ஒருவொருவர் தலையில் இடி விழுந்தது போன்ற உணர்வு.
பிறகு அடுத்த ஐந்து நிமிடத்தில் மாசு கட்டுபாடு வாரியத்தின் மேலாளர் எஙகளுடன் பேசினார், அவரும் எங்களுக்கான அரசாணைக குறித்தும், நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் ஒன்றுமே அறியாதவர் போல எங்களைப் பேசி சமாளித்தார். அதன் பின் 27.04.2022 காலை அன்று நியமன ஆணையை நேர்முக தேர்வு நடந்த மற்றவர்களுக்கு அனுப்பி உள்ளனர்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ மெய்யநாதனை 27.04.2022 அன்று பல சிரமங்களுக்குப் பின் இரவு 11.30 மணியளவில் நாங்கள் எல்லோரும் சந்தித்துப் பேசினோம். அவரால் எதுவும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார்.
மாசு கட்டுபாடு வாரியம் வெளியிட்டிருந்த பட்டியலில் தேர்வாகி உள்ளவர்களின் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண்களுக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளாத எங்களின் மதிப்பெண்ணிற்கும் சொற்பமான வித்தியாசமே உள்ளது.
இன்னும் எங்களுக்கு நேர்முக தேர்வே நடக்கவில்லை அப்படி நடக்காமலேயே இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறோம். நேர்முக தேர்வும் நடத்தினால் இதில் பாதி பேர் (Open category) பொது பிரிவிலேயே செல்ல வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், இந்தப் பணிக்கு தேவையான தகுதியான படிப்பைப் படித்திருந்தும், அதை மேலும் நீதிமன்றத்தின் மூலம் உறுதிப்படுத்தியும், முன்னாள் முதல்வர் கலைஞர் மூலம் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற தமிழக அரசின் மாநில வேளாண் பல்கலைக்கழகமான கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற எங்களை வாரியம் நிராகரித்திருப்பது மன உளைச்சலைத் தருகிறது.
நாங்கள் அனைவரும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் நபர்களாகவும், சிலர் மாணவர்களாகவும் உள்ளனர். இந்த ஒரு வேலைக்காக எங்கள் வாழ்வின் மூன்று ஆண்டுகளை அர்ப்பணித்தும், ஏழ்மைப்பட்ட, சமூகத்தால் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் பெற்றோரின் பொருளுதவியின் மூலம் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து பல நாட்கள் சென்னை மாநகரில் தங்கி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு போராடி வென்றும், நியாயமற்ற காரணங்களால் அதற்குப் பலனில்லாமல் போனது பெரும் மனவுளைச்சலையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
சான்றிதழ் சரிப்பார்ப்பிற்காக நாங்கள் சென்றது முதல் தற்போது மாசு கட்டுபாடு வாரியத்தின் தலைவரைப் பார்க்க அனுமதி வழங்காதது வரை தொடர்ந்து எங்களை மாசு கட்டுபாடு வாரியம் புறக்கணித்து வருவது வேதனைக்குள்ளாக்குகிறது. இச்செயல் யாவும் எங்களது சம நீதியை பறிப்பதாய் உள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் அறிவியல் பயின்ற எங்களைப் போன்ற பட்டதாரிகளுக்கு இத்துறை சார்ந்த வேறு பணி வாய்ப்புகள் இல்லாததால் இதே பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பிலேயே நேர்முகத் தேர்வை மிக விரைவில் நடத்தி எங்களுக்குத் தகுந்த நீதியை விரைவில் வழங்கிட தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.
நீதியும் அறமும் வெல்லும் என நம்பிக்கையுடன் எதிர் நோக்கி காத்திருக்கிறோம்", இவ்வாறு மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.