கோவை உணவகங்களில் கண்டறியப்பட்ட கெட்டுப்போன சைவ, அசைவ உணவுகளால் அதிகாரிகள் தரப்பில் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த உணவை உட்கொள்வதால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கோவை: கோவையில் உள்ள 'சிக்கன் ஷவர்மா' விற்பனை செய்த கடைகளில் நேற்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கெட்டுப்போன கோழிக்கறி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இந்த உணவை உட்கொள்வதால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
•நஞ்சாகும் உணவு:
கேரளா மாநிலத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் கோழி இறைச்சியை கொண்டு தயார் செய்யப்படும் 'சிக்கன் ஷவர்மா' சாப்பிட்ட கேரள சிறுமி உயிரிழந்தார். மேலும் பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அப்போது அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், ஷவர்மா தயாரிப்பதற்குக் கெட்டுப்போன கோழிக்கறி பயன்படுத்தியது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக கேரளா மாநிலம் முழுவதும் சிக்கன் உணவு தயாரிப்பு உணவகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகக்கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எட்டு குழுவாகப் பிரிந்து, மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.
•முதல் நாள் மாமிசம்:
அப்போது கோவைவ.உ.சி. பூங்காவை ஒட்டிய கடைகளில் மாலை வேளைகளில், 'சிக்கன் ஷவர்மா' விற்பனை நடைபெறும் கடைகளில் நேற்று மாலை, உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில், அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டனர்.
'டென்மார்க்' மற்றும் 'தி மெஜஸ்டிக்' ஆகிய இரு கடைகளில் நடந்த ஆய்வில், கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அதே போல கெட்டுப்போன கிரேவி, கெட்டுப்போன பிரியாணியிலிருந்து சேகரிக்கப்பட்ட கறித்துண்டுகள், காய்ந்து போன இடியாப்பம் ஆகியவையும், பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
இந்த கடைகளிலிருந்து சிக்கன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
கோவையில் சிக்கன் ஷவர்மா மட்டுமின்றி சைவ மற்றும் அசைவ வகை பல்வேறு உணவு வகைகளை உணவகங்களில் பதப்படுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக பாதி வெந்த நிலையில் சிக்கனை சமைப்பதற்காகப் பதப்படுத்தி வைத்திருந்தது.
•ஆபத்தை ஏற்படுத்தும் பழைய அசைவ உணவு:
மேலும், பழைய பிரியாணி, பீட்சா ஆகியவற்றை குளிர்சாதப்பெட்டியில் உள்ள பிரீஷரில் வைத்திருந்தனர். இவை மிகவும் ஆபத்தை ஏற்படுத்த கூடியது. அதே போல இஞ்சு பூண்டு பேஸ்ட்டை சுமார் 5-நாட்களுக்குத் தேவையான அளவை தயார் செய்து அதையும் பதப்படுத்தி வைத்துள்ளனர். அதிகபட்சம் 24 மணி நேரம் மட்டுமே வைக்க வேண்டும் ஆனால் பெரும்பாலான கடைகளில் நீண்ட நாட்கள் வைக்கின்றனர் எனத்தெரிவித்தார்.
•விதிகளை மீறிய கடைகளுக்கு நோட்டீஸ்:
அசைவம் மட்டுமின்றி சைவ துரித உணவுகளையும் பதப்படுத்தி விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் முதல் கட்டமாகச் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், விதிமீறல்களில் ஈடுபடும் உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
•மாவட்டத்தில் சோதனை மேற்கொண்ட இடங்கள்:
கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக கோவை மாநகரில்போத்தனூர், சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், ஆர்.எஸ் புரம், காந்திபுரம், பீளமேடு, சரவணம்பட்டி சிங்காநல்லூர், ஒண்டிபுத்தூர்ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்டு நான்கு குழு அமைத்து மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சோதனை மேற்கொண்ட கடைகள்: 73
பறிமுதல் செய்யப்பட்ட பழைய சவர்மா: 57.45-கிலோ
மதிப்பு:ரூ.17480/-
எடுக்கப்பட்ட கண்காணிப்பு உணவு மாதிரிகள்: 3
நோட்டீஸ் வழங்கப்பட்ட கடைகள்: 35
பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்: 3-கடைகள் - ரூ:6000/-