கோவை கீரணத்தம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் குடியிருப்பு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் குடியிருப்பு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் காந்திபுரம், சாய்பாபா காலனி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்த பொதுமக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த குடியிருப்பில் மட்டும் சுமார் 1,230-குடும்பங்கள் வசித்து வருகிறது. அதேபோல், சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் 300-குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்நிலையில், அந்த குடியிருப்பு அருகே புதிய டாஸ்மாக் கடையை திறக்க உள்ளதாக அரசு தெரிவித்தது.
அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் குடியிருப்பு வாசிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே, அந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக டாஸ்மாக் கடை வந்தால் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாகத் தினசரி கூலி வேலைக்குச் செல்வோர் அதிகளவு அந்த குடியிருப்பில் உள்ளதால், தங்கள் தினசரி வருமானத்தை அப்படியே டாஸ்மாக் கடைக்குக் கொண்டு கொடுக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.
உடனடியாக டாஸ்மாக் வருவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி கோசங்களை எழுப்பினர்.