மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவுத்தம்பதி மலைவாழ் கிராமத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பார்வையாளராக கலந்து கொண்டார்.
கோவை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையாளராக கலந்து கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவுத்தம்பதி மலைவாழ் கிராமத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி செந்தில்குமார், தலைமையில் நடைபெற்றது.
இந்த கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., பார்வையாளராக கலந்து கொண்டார்.
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, உதவி இயக்குனர் ஊராட்சிகள் முருகேசன், வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ, மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சித்ராதேவி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராம்குமார், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எம்.ராஜா, உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கிராம சபைக் கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கூட்டப் பொருட்கள் உள்ளன.
ஊராட்சிகளின் 2021-22 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, ஒன்றிய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் (POSHAN ABHIYAN) மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்த ஊராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் உடனடியாக நிறைவேற்றப்படப் பொதுமக்களின் அரசு திட்டங்களின் மீது பொதுமக்களின் கண்காணிப்பு அவசியம், மேலும் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள், மனை உள்ளவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., பேசினார்.
மாவுதம்பதி சின்னாம்பதி உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழ் பெறாத நிலையில் உள்ளதால் அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர் முகாம் நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து மாவுதம்பதியில் பள்ளிக்கட்டிடம் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் அரசு நூலகம் போன்ற பல்வேறு அலுவலகங்கள் உள்ள நிலையில் இப்பகுதியில் சிசிடிவி அமைத்தல், அனைத்து ஊராட்சிகளிலும் முதலுதவி பெட்டிகள் அமைத்தல், பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்தல், தூய்மை பாரத இயக்கத்தினை விரிவுபடுத்தி, பசுமை பரப்பினை அதிகரித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்துதல், ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள நீர்நிலை பகுதிகளை மேம்படுத்துதல், ஜல் ஜீவன் திட்டத்தில் 100-சதவிகிதம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துதல், நமக்கு நாமே திட்டத்தினை செயல்படுத்துதல், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக பல்வேறு துறை அலுவலர்கள் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கினார்கள். மேலும் ஊராட்சி செயலர் கிராம சபை கூட்டம் பொருள்கள் குறித்து விளக்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இதில் பள்ளி மாணவியர்களிடம் சைல்டு லைன் எண் 1098-குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பித்ததுடன், மாவட்ட ஆட்சித்தலைவரது அலைப்பேசி எண்ணிலிருந்து 1098-சைல்டு எண்ணிற்கு அழைத்து பரிசோதித்தார். மேலும் மாணவர்களுக்கு சைல்டு லைன் குறித்தும் எடுத்துரைத்தார்.