சென்னை அருகே ஒரு ஜவுளி நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்து அதன் மூலம் ஒருங்கிணைந்த ஜவுளி சந்தைப்படுத்துதல் மற்றும் பேஷன் டிரெண்டை உருவாக்கவும், அதற்காக ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய ரூ.1 கோடி ஒதுக்கியதை சைமா தலைவர் வரவேற்றுள்ளார்.
கோவை: ஜவுளித்துறை மேம்பாட்டுக்கு தமிழக அரசு எடுத்து வரும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகளுக்கு சைமா நன்றி தெரிவித்துள்ளது.
பருத்தி நூல் உற்பத்தியில் 45 சதவீதத்தையும், விசைத்தறி துணி உற்பத்தியில் 22 சதவீதத்தையும் கைத்தறி துணி உற்பத்தியில் 12 சதவீதத்தையும், பின்னலாடை துணி உற்பத்தியில் 45 சதவீதத்தையும், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் 40 சதவீதத்தையும், ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்களின் உற்பத்தியில் 70 சதவீதத்தையும் கொண்டு தமிழக ஜவுளித் தொழில் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு ஜவுளி வணிகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
மேலும், 60 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து, ஒரு லட்சம் கோடிக்கு மேல் அன்னியச் செலவாணியை ஈட்டித்தந்து, தமிழகம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கி வருகிறது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியில் 35 சதவீதத்தை தமிழகம் பயன்படுத்தி வருகிறது.
தமிழக முதல்வராக, மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனே, தமிழக உற்பத்தித் துறையின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், எளிதாக தொழில் நடத்துவதற்கும் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கி அவற்றிற்கான உதவிகளை செய்து வருகிறார். ஜவுளித் தொழிலின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து முதல்வர் அதற்கென பிரத்யேக ஆணையர் அலுவலகத்துடன் தனித்துறையை உருவாக்கினார்.
கடந்த 1959-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வந்த வேளாண் சந்தை குழு வரியை நீக்கிய முதல்வரின் முடிவினால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் நூல் நூற்புத்துறையினர் பலன் அடைந்து ஒட்டு மொத்த ஜவுளி சங்கிலிக்கும் அந்த உதவிகரமாக இருந்தது.
மாநிலத்தில் பருத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.15.32 கோடியை ஒதுக்கியும், மாநிலத்தில் கூடுதல் நீண்ட இழை பருத்தி உற்பத்தியை மேம்படுத்தவும், கரிம பருத்தி மற்றும் அங்கக பருத்தி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் ஒரு குழுவை அமைத்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழகத்தில் ஜவுளித் தொழிலின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும் வகையில் பல்வேறு கொள்கை அறிவிப்புகள் அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில், நேற்றைய தினம் கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு பல்வேறு கொள்கை அறிவிப்புகளை சட்டசபையில் அறிவித்ததற்கு முதல்வர், மு.க.ஸ்டாலின் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர், ஆர்.காந்தி அவர்களுக்கும், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர், ரவி சாம் தனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஜவுளி பதப்படுத்துதல் துறையில் குவியும் உப்புகளை அகற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு, ஜவுளி பதப்படுத்துதல் துறையினருக்கு பெரும் நிவாரணம் அளிப்பதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் என்று ரவி சாம் தெரிவித்தார்.
ஆட்டோமொபைல் துறைக்காக மொபைல்டெக், பாதுகாப்புத் துறைக்காக புரோடெக், விளையாட்டுத் துறைக்காக ஸ்போர்ட்டெக், மருத்துவ ஜவுளித் துறைக்காக மெடிடெக் போன்ற தொழில்நுட்ப ஜவுளித்துறையின் உட்பிரிவுகளுக்கு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டதற்காக அரசுக்கு அவர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இது மாநிலத்தின் ஏற்றுமதியை பெரிதும் ஊக்குவிக்கும் என சைமா தலைவர் தெரிவித்துள்ளார். சென்னை அருகே ஒரு ஜவுளி நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்து அதன் மூலம் ஒருங்கிணைந்த ஜவுளி சந்தைப்படுத்துதல் மற்றும் பேஷன் டிரெண்டை உருவாக்கவும், அதற்காக ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய ரூ.1 கோடி ஒதுக்கியதை சைமா தலைவர் வரவேற்றுள்ளார்.
அனைத்து முக்கிய சர்வதேச ஜவுளி கண்காட்சிகளிலும், தமிழ்நாடு காட்சியரங்கு (Tamilnadu Pavilion) இருக்கும் என்ற அறிவிப்பு தமிழக ஜவுளிப் பொருட்களுக்கான முத்திரையை உலகளவில் பதிக்கவும், அதன் மூலம் நமது ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும். தமிழக ஜவுளித் தொழில் உற்பத்தித் திறன் தொடர்பான தகவல்களைப் பரப்புவதற்கும், நேரடி வர்த்தக வாயப்புகளை (B2B) எளிதாக்கவும் ரூ. 1 கோடி செலவில் பிரத்யேக இணையதளம் மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்கும் அறிவிப்பை ரவி சாம் வரவேற்றுள்ளார்.
தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை அமைக்கும் அறிவிப்பு தொழிற்துறையினர் அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளவும், பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கவும் பயனளிக்கும் என்று சைமா தலைவர் கூறியுள்ளார்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாஜி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தி ரூ.50 இலட்சம் செலவில் ஆண்டு ஒன்றிற்கு 500க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை உருவாக்குதல், தேசிய வடிவமைப்பு நிறுவனம் மூலம் ரூ.50 லட்சம் செலவில் 50 கைத்தறி நெசவாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்குதல், தமிழ்நாடு ஜரி லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.2.50 கோடி ஒதுக்கீடு, தமிழ்நாடு கைத்தறி நம்பகத்தன்மை அமைப்பு உருவாக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு, பாரம்பரிய மற்றும் GI குறியிடப்பட்ட கைத்தறி பொருட்களை டிஜிட்டல் மயமாக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு, “ஹேண்ட்லூம்ஸ் ஆப் இந்தியா” என்ற பெயரில் கைத்தறி விற்பனை இணைவு அங்காடியை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு, மாநிலத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறிகளின் கணக்கெடுப்பு மற்றும் Geo Tagging ஆகியவற்றுக்கு ரூ.10 கோடி வழங்குதல், 5000 விசைத்தறிகளில் மின்னணு பேனல் போர்டை நிறுவ நிதியுதவி அளித்து அவற்றின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், சென்னையில் சர்வதேச வடிவமைப்பு ஸ்டுடியோ உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு போன்ற கைத்தறி துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடிய தனித்துவமான அறிவிப்புகளை சைமா தலைவர் ரவி சாம் வரவேற்றுள்ளார்.
தமிழக அரசின் இது போன்ற தனித்துவமான நடவடிக்கைகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகள் அனைத்தும் தமிழக ஜவுளி மற்றும் ஆடைத்துறையின் விரைவான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றும், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஐவுளித்துறையில் தமிழகம் தொடர்ந்து தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் என்றும் ரவி சாம் நம்பிக்கை தெரிவித்தார்.