சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில், சமீபத்தில் தமிழக அரசு விருது பெற்ற செந்தலை ந.கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார்.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில், சமீபத்தில் தமிழக அரசு விருது பெற்ற செந்தலை ந.கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், சூலூருக்கும் சுயமரியாதை கொள்கைக்கும் நிறைய தொடர்பு உண்டு என தெரிவித்தார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை பெரியார் அவமரியாதை செய்தது இல்லை எனவும் குன்றக்குடி அடிகளார் இருக்கையில்அமர்ந்திருந்த போதுஅவருக்கு இணையாக உட்கார மறுத்தவர் எனவும் தெரிவித்தார்.
ஆதிக்க சக்திகளைத் தான் அவர் வெறுத்தார் என்றும் பிராமணீயத்தை தான் அவர் வெறுத்தார் என்றும் பிராமணர்களை வெறுக்கவில்லை என கூறினார். மேலும் காஞ்சி பெரியவர் மயிலாப்பூர் வந்த பொழுது தி.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைக் கேள்விப்பட்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி காஞ்சிப் பெரியவருக்குப் பாதுகாப்பு கொடுத்தார் எனவும் தெரிவித்தார்.
பிறர் உணர்வுகளை மதித்தவர் ஆனால் இப்பொழுது அந்த உணர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதுஎன தெரிவித்தார். இந்த விழாவில் சூலூர் தமிழ் சங்க தலைவர் பொன்முடி,மன்னவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.