ஒரே இரு சக்கர வாகனத்தில் மூன்று நண்பர்கள் பயணித்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த அரசு பொதுக் கழிப்பிட சுவற்றில் பயங்கரமாக மோதியது.
கோவை: கோவை - சத்தி சாலையில்அரசு கழிப்பிட சுவற்றில் மீது மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி (21).ஸ்ரீஜித் (25).இவர்கள் இருவரும் அன்னூரில் உள்ள விடுதியில் தங்கி, தனியார் மில்லில் பணியாற்றி வந்தனர். இன்று, இருவரும் அன்னூரை சேர்ந்த தங்களது நண்பரான லூர்து சகாயராஜ் (25)என்பவருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் அன்னூர்-சத்தி சாலையில் விளையாட்டாக வளைத்து, வளைத்து ஓட்டியபடி அதிக வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, சத்தி சாலையில் உப்புத்தோட்டம் கட் ரோடு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரமாக இருந்த அரசு பொதுக்கழிப்பிட சுவற்றில் பயங்கரமாக மோதியது. இதில், கழிப்பிடத்தில் இருந்த மூதாட்டி லட்சுமி (60) என்பவர் படுகாயமடைந்தார்.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணசாமி, ஸ்ரீஜித் உள்ளிட்ட இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். விபத்தில், படுகாயமடைந்த லூர்து சகாயராஜ், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.