பிடிபட்ட பேருந்துகளை விடுவிக்கவும், மேலும் பல்வேறு பணிகளுக்காகவும், கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையாளர் உமா சக்தி இந்த லஞ்ச தொகையை பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கோவை: கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து லஞ்சமாகப் பெற்ற ரூ.28.35 லட்சம் ரூபாயை கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையாளர் உமா சக்தி வாகனத்திலிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத லட்சக்கணக்கான பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இன்று கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து துறை இணை ஆணையர் உமாசக்தி, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, கணக்கில் வராத 28.35 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தொடர் விடுமுறை தினங்கள் காரணமாக, கோவையிலிருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நடத்திய ஆய்வில், கோவை சரகத்தில் 2 பேருந்துகளை பறிமுதல் செய்து கோவை மத்திய வட்டார போக்குவரத்து, இணை ஆணையர் உமாசக்தி நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்நிலையில், பிடிபட்ட பேருந்துகளை விடுவிக்கவும், மேலும் பல்வேறு பணிகளுக்காகவும், உமா சக்தி இந்த லஞ்ச தொகையை பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே, இந்த திடீர் சோதனை நடத்த பட்டுள்ளதாகத் தெரிகிறது.