முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் மருதமலை சாலை, கல்வீரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் வயது 19 என்பதும், பாரதியார் பல்கலை., பெண்கள் விடுதிக்குள் புகுந்து லேப்டாப் செல்போன் போன்ற பொருட்களை திருடி வந்ததும் தெரியவந்துள்ளது.
கோவை: பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதி அருகே இரவில் சுற்றித் திரிந்த மர்ம நபரை கைது செய்த வடவள்ளி போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டு பிளாக்குகளில் மாணவிகள் விடுதி உள்ளது. இந்த மாணவியர் விடுதி அருகே, கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக மாணவிகள் புகார் அளித்து வந்தனர்.
தொடர்ந்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவிகள் விடுதி வளாகத்தில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் இரவு நேரத்தில் ஒரு மர்ம நபர் விடுதி வளாகத்தில் சுற்றிய வீடியோவுடன் மாணவிகள் புகார் அளித்தனர்.
புகார் அடிப்படையில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பிடிபட்ட நபர் கல்வீராம்பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன் (19) என்பது தெரியவந்தது.
மேலும், அவர் பெண்கள் உடை அணிந்து இரவு நேரத்தில் மாணவிகள் விடுதிக்குள் சென்று லேப்டாப் மற்றும் செல்போன்களை தேடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் மாணவிகளை அச்சுறுத்தி வந்த மர்ம நபரை போலீசார் கைது செய்ததால் மாணவிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.