கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம், காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின் அவர் ஓய்வு எடுக்கச் செல்லும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ல், அங்கு காவலாளியாக பணியாற்றிய ஓம் பகதூர் என்பவரை கொலை செய்து, அங்கிருந்த பொருட்களை கும்பல் திருடிச் சென்றது.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜூக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஆனால் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கொடநாடு வீட்டில் திருட கனகராஜ் ஏற்பாடு செய்த சயான், மனோஜ் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஓட்டுனர் கனகராஜ் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் பணி நீக்கம் செய்யப்பட்டதும், அதன் பின்னர் சிறிது காலம் அப்போது கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ வாக இருந்த ஆறுகுட்டியிடம் கனகராஜ் ஓட்டுநராக வேலை பார்த்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் மேற்பார்வையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து விசாரிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகள் கோவை, நீலகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு தனித் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்ட எஸ்.பி. அஷிஷ் ராவத் தலைமையிலான தனிப்படை அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜெயா தொலைக்காட்சியின் இயக்குனர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கோவை வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து இந்த விசாரணையானது நடைபெற்று வருகிறது. ஆறுகுட்டியிடம் ஓட்டுனராக பணிபுரிந்த போதும், அதன் பின்பும் இருவருக்கும் இருந்த தொடர்புகள் குறித்தும், கொடநாடு சம்பவத்திற்கு முன்பாக போனில் இருவரும் பேசிக் கொண்டது குறித்தும் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. பிற்பகல் 12 மணி முதல் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணையின் முடிவில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் நீலகிரி மாவட்ட எஸ்பி அஷிஷ் ராவத் உட்பட காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சேலம் ஆத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.