இந்தியாவில் ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில்களும் மிக கடுமையான நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பஞ்சு விலை தாறுமாறாக தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தொழில்துறையினர் சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுள்ளனர்.
கோவை: பஞ்சு விலை பிரச்சனையால், கோவை உட்பட தமிழகம் முழுவதும் 1,000 மில்களில் வாரம் இரண்டு நாட்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யவேண்டிய சூழல் உள்ளதால், பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டும் என்று கோவை, திருப்பூர் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஞ்சு விலை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வரும் காரணத்தால், நிலைமையை சமாளிக்க முடியாமல் தமிழகம் முழுவதும் சிறு, நடுத்தர பிரிவை சேர்ந்த 1,000 ஸ்பின்னிங் மில்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.
இந்த நிலையில், பஞ்சு இறக்குமதிக்கான 10 சதவீத வரியை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசுக்கு கோவை, திருப்பூர் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (SISPA) கவுரவ செயலாளர், ஜெகதீஷ் சந்திரன் கூறியதாவது:
வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் ஜவுளி தொழில் மிகுந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 356 கிலோ பஞ்சு கொண்ட ஒரு கேண்டி (Candy) விலை 95 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர பிரிவை சேர்ந்த ஸ்பின்னிங் மில்கள் இந்த விலை உயர்வு பிரச்சினையால் மிகுந்த நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நிலைமையை சமாளிக்க முடியாமல் தமிழகத்தில் மொத்தம் உள்ள 2,000 ஸ்பின்னிங் மில்களில் தினசரி நூல் உற்பத்தி 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, செயற்கை தட்டுப்பாடு காரணமாக பஞ்சு விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளது. மத்திய அரசு, பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரியை உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு செய்தால், உடனடியாக இந்தியாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பஞ்சு தானாக மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துவிடும். இதனால் நாடு முழுவதும் பஞ்சு விலை உடனடியாக குறையும்.
எனவே, மத்திய அரசு இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின்(TEA), தலைவர், ராஜா எம் சண்முகம் கூறியதாவது:
இலங்கை, பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நிதி நெருக்கடி, சீனாவில் காணப்படும் நோய்த் தொற்று பரவல் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் தற்போது இந்திய ஜவுளித்தொழிலுக்கு பல்வேறு உலக நாடுகளில் இருந்து அதிக ஆர்டர்கள் பெற அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை சாதகமான சூழல் நிலவும் போதும், இந்தியாவில் வர்த்தகர்கள் பஞ்சுக்கு மிக அதிக விலையை நிர்ணயித்து வரும் காரணத்தால், நூல் விலையும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, இந்தியாவில் ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில்களும் மிக கடுமையான நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பஞ்சு விலை தாறுமாறாக தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திருப்பூர் கார்மெண்ட் தொழில்துறையினர் சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுள்ளனர்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒரு கிலோ நூல் 200 ரூபாய்க்கு வாங்கினோம். அதே நூல் விலை இன்று தாறுமாறாக அதிகரித்துள்ள காரணத்தால், இருநூறு ரூபாய்க்கு அரை கிலோ மட்டுமே வாங்க கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது, கார்மென்ட் ஆர்டர்கள் மிக சிறப்பாக உள்ளன. இருந்தபோதிலும், பஞ்சு, நூல் விலை உயர்வு காரணமாக ஆர்டர்களை செய்து முடித்து ஏற்றுமதி செய்ய முடியாமல் ஏற்றுமதியாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில், மத்திய அரசு உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சமீபத்தில் மத்திய ஜவுளி தொழில்துறை அமைச்சரை நேரில் சந்தித்த, பல்வேறு ஜவுளித் தொழில் அமைப்பினர், இது குறித்தான கோரிக்கை மனுவை வழங்கி தெளிவாக அவரிடம் பிரச்னை குறித்து எடுத்துக் கூறியுள்ளோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை, சாஸ்தா டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ், நிர்வாக இயக்குனர், சாஸ்தா எம் ராஜா கூறியதாவது:
வரலாறு காணாத பஞ்சு விலை காரணமாக, இந்திய ஜவுளித்தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கையில் பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக ஒரு சில நகரங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன.
இத்தகைய சூழலில், இந்திய ஜவுளித் தொழிலுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆர்டர்கள் மிக அதிக அளவு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக பஞ்சு விலையை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.விரைவில், இப்பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கவேண்டிய ஜவுளி தொழில் ஆர்டர்களை பெற்றுவிடும்.
இதனால், இந்திய ஜவுளி தொழில் மிக கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.