கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்களுக்குச் சம்பளம் கூட வழங்க முடியாத நிலையிலிருந்து மீண்டு வரும் பொழுது மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக உயர்த்தி விட்டது.
கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்புகோவை மாவட்ட அச்சகதார் சங்கம் சார்பில் அவர்கள் துறையின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மற்றும் பொள்ளாச்சி அச்சக சங்கங்கள் இதில் பங்கேற்றனர். இதில் கோவை மாவட்ட அச்சகத்தார் சங்க தலைவர் குமாரவேல் தலைமை வகித்தார்.
பெரும்பாலான அச்சு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளதைக் கண்டித்தும் சாதாரண காகிதம் ஒரு டன் 7,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும் ஆர்ட் போர்ட் பேப்பர் டன்னுக்கு 50 ஆயிரம் வரை உயர்ந்துள்ளதைக் கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
மேலும் காகித விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். பிளேட் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். கெமிக்கல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். காகித ஆலைகள் தினசரி விலையை ஏற்றக்கூடாது.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும். காகித ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட அச்சகதார் சங்க தலைவர் குமாரவேல் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்களுக்குச் சம்பளம் கூட வழங்க முடியாத நிலையிலிருந்து மீண்டு வரும் பொழுது மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக உயர்த்தி விட்டதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து பலமுறை மத்திய அரசிற்குக் கோரிக்கை வைத்தும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார். அதேசமயம் காகித ஆலைகள் காகிதங்களை வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்த்தி விட்டதாகவும் தெரிவித்தார்.
எனவே மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்துச் சரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், மத்திய மற்றும் மாநில அரசுகள் காகித ஆலைகளை அழைத்துப் பேசவேண்டும். காகித விலைகளைக் கட்டுப்படுத்த காகித ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும் என கூறினார்.