கோவை மாநகராட்சி வார்டு எண்: 81 ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிப்பறை, சத்துணவு கூடம், வகுப்பறைகளை நேரில் பார்வையிட்ட மேயர், மாணவிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
கோவை: கோவை மாநகராட்சி ஒப்பணக்கார வீதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்: 81 ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிப்பறைகளை நேரில் பார்வையிட்டபோது, அங்குள்ள மாணவிகள் கழிப்பறையில் செய்ய வேண்டிய வசதிகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.
மாணவிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த மேயர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கழிப்பறையில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை உடனடியாக செய்து முடிக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அப்பள்ளியின் சத்துணவு மையத்தை பார்வையிட்ட மேயர் கல்பனா, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர், பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்தும், ஆசிரியர்கள், மாணவியரின் வருகைப் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
மேலும், பள்ளியில் குடிப்பதற்கு தரமான குடிநீர் விநியோகிக்கவும், கழிவுநீர் தங்கு தடையின்றி செல்வதற்கு ஏதுவாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது துணை மேயர், ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி கல்வி அலுவலர் கே.பாண்டிய ராஜ சேகர், மாநகராட்சி கல்விக்குழு தலைவர், மாலதி நாகராஜ், செயற்பொறியாளர், புவனேஸ்வரி, இளம் பொறியாளர், விமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.