சின்ன வெங்காயத்தை மாலையாக கட்டி கழுத்தில் அணிந்து கொண்டு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
கோவை: சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால்வேதனையடைந்த விவசாயிகள் உரிய விலைக்கு விற்க வழிவகை செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இன்றைய தினம் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தை பத்து ரூபாய்க்கு கீழ் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதால் தங்களுக்கு முதலீடு செய்த தொகை கூட கிடைப்பதில்லை எனக் கூறியும் சின்ன வெங்காய விவசாயத்தை உரிய விலைக்கு விற்பனை செய்ய வழிவகை செய்து தருமாறும் கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின் தலைவர்சு.பழனிச்சாமி தலைமையில் மனு அளிக்க வந்த அவர்கள் சின்ன வெங்காயத்தை மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிவித்துக் கொண்டனர். மேலும் சின்ன வெங்காயத்தை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்தனர். எனவே மனு அளிக்க வந்த பொதுமக்கள் பலரும் சின்ன வெங்காயத்தை வாங்கி சென்றனர்.
இது குறித்து அவர்கள் அளித்த மனுவில் சின்ன வெங்காயம் ஒரு ஏக்கர் விவசாயம் செய்வதற்கு 70 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் எனவும் ஆனால் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருப்பதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
எனவே தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சின்ன வெங்காயத்தை உரிய விலைக்கு விற்பனை செய்ய வழிவகை செய்து தரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.