மருத்துவர்களை குற்றவாளிகளாக பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளை மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.
கோவை: கோவையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர் அர்ச்சனா சர்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிரசவத்திற்கு பின் அதிக இரத்தபோக்கு ஏற்பட்டது. மருத்துவர் எவ்வளவோ முயன்றும் அந்த பெண்ணின் உயிரைக் காப்பற்ற முடியவில்லை.
இந்த நிலையில், இறந்த பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தினர். காவல்துறை அதிகாரிகள் மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த பின்னர் உடலை வாங்கி சென்றனர்.
மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் போது வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், காவல் துறை அதைக் கருத்தில் கொள்ளாமல் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மனஉலைச்சலும், வேதனையும் அடைந்த மருத்துவர் அர்ச்சனா தற்கொலை செய்துகொண்டர். இதனால் நாடு முழுவதும் மருத்துவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதனால் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரை அவசரம் இல்லாத மருத்துவ பணிகளை நிறுத்திவிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர் சர்மா மீது தவறான வழக்கு பதிவு செய்த காவல் துறை அதிகாரிகள் மீது உடனடியாக கைது செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கவேண்டும்.
மருத்துவர்களை குற்றவாளிகளாக பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளை மாற்ற வேண்டும். மேலும் மருத்துவ பணிகளை பயமில்லாமல் செய்யவும், மருத்துவதுறை சார்ந்த அறுவை சிகிச்சைகளை தயக்கம் இல்லாமல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.