இதற்கான ஆயத்த பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கீழ் பவானி பாசன வாய்க்கால் பாதுகாப்பு அமைப்பு ஆதங்கம்.
கோவை: 4 லட்சம் மரங்களை வெட்டுவதற்கான ஆயத்த பணிகள் நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கீழ் பவானி பாசன வாய்க்கால் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
பெருந்துறை சிப்காட்டால் மாசடைந்துள்ள நிலத்தடி நீரினால் நீருக்கு மாற்று வழியாகக் குடிநீர் ஆதாரமாக விளங்குவது கீழ்பவானி பாசனத்தின் கசிவு நீர். ஆனால் அதுவும் பாசனப்பகுதி பாதுகாப்பும், குடிநீர் ஆதாரமும், விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துவதால் அழிந்துவிடும் என கீழ் பவானி பாசன வாய்க்கால் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கீழ் பவானி பாசன வாய்க்கால் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் இந்தியாவின் நீராதாரங்களில் முக்கிய பங்கு மேற்குத் தொடர்ச்சி மலைக்கு உண்டு. தமிழகத்தின் மழை அளவு 987 mm ஆகும். அதிலும் குறிப்பாக மேற்கு தமிழகம் மேற்குத் தொடர்ச்சி மலையின் மழை மறைவு பகுதி. மேற்கு தமிழகத்தின் மழை அளவு 600 mm ஆகும்.
1955ம் ஆண்டு உலகிலேயே மண்ணால் கட்டப்பட்ட முக்கிய அணைகளில் ஒன்று பவானி சாகர். இவ்வணையிலிருந்து வரும் கீழ் பவானி பாசன வாய்க்கால் நீர், மேற்கு மண்டலத்தின் உயிர் நீர்.
பெருந்துறை SIPCOT யினால் மாசடைந்துள்ள நிலத்தடி நீரினால் நீருக்கு மாற்று வழியாகக் குடிநீர் ஆதாரமாக விளங்குவது கீழ்பவானி பாசனத்தின் கசிவு நீர். ஆனால் அதுவும் பாசனப்பகுதி பாதுகாப்பும், குடிநீர் ஆதாரமும், விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துவதால் அழிந்துவிடும் .
ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்டங்களில் குறிப்பாக காங்கேயம், சென்னி மலை, நம்பியூர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், குன்னத்தூர், ஊத்துக்குளி, வெள்ள கோவில், சிவகிரி, கொடுமுடி போன்ற நகராட்சிகளும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறு குறு கிராமங்களின் நேரடி குடிநீர் ஆதாரமாகவும், குளம், குட்டை , ஏரி, தடுப்பணை, ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு மூலம் முப்பது லட்சம் மக்களுக்கு மேல் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
ஓடத்துறைக்குளம், ஆனந்த சாகர் ஏரி, கொரங்கண் பல்ல ஓடை மற்றும் 34 கசிவு நீர் திட்டங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெற்று விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும், நிலத்தடி நீர் செறிவூட்டல் மூன்று மாவட்டங்களிலும் முற்றிலுமாக இல்லாமல் போய்விடும்.
24 சதவீதம் உள்ள தமிழ்நாட்டின் காட்டின் பரப்பளவை, 33 சதவீதமாக 2030ம் ஆண்டிற்குள் பசுமை நிறைந்த மாநிலமாக மாற்றுவதாக உறுதி அளித்துள்ளார் நமது தமிழக முதலமைச்சர்.
மண் கால்வாயில் 200 கிலோமீட்டர் மற்றும் கிளைக்கால்வாயில் 720 கிலோமீட்டர் நிலத்தில் உள்ள 65 ஆண்டு பழமையான அறிய வகை 4 லட்சம் நாட்டின் மரங்களை வெட்டுவதற்கான ஆயத்த பணிகள் நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். இது சுற்றுச்சூழலுக்குச் செய்யும் அநீதியாகும்.
ஈரோடு மாவட்ட வெள்ளோடு பறவைகள் சரணாலயம் - கீழ் பவானி கால்வாயில் கான்கிரீட் தளம், கான்கிரீட், கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைத்தல் அழிவது மட்டும் இல்லாமல், இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கம் உள்ளாகிவிடும்.
100க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றங்கள், ஈரோடு, திருப்பூர் பாசன கலவை நவீனப் படுத்துதல் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு மனு அளித்துள்ளோம்.
இதனை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா 2013ம் ஆண்டு கான்கிரீட் திட்டத்தைக் கைவிட்டார். 09.11.2021 அன்று எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் இந்த திட்டத்திற்கு உயிர் கொடுத்தார். இந்த திட்டத்திற்கு மீண்டும் மிகப்பெரிய எதிர்ப்பு இந்த பகுதியில் உருவானது.
2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கு தாராபுரம், ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளுக்கு வருகை தந்த தாங்கள் கீழ் பவானி பாசனத் திட்டத்தில் நவீனப்படுத்துதல் பணியை ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் திட்டத்தைச் செயல் படுத்துவதாக அறிவித்து முதலமைச்சர் தாராபுரம் பொதுக் கூட்ட மேடையில் பேசி இருந்தார்.
அதன்படி, பொதுமக்கள் விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி இத்திட்டத்தினை கைவிடுமாறு கோரிக்கை மனுவை நத்தக்காடையூர் ஊராட்சி தலைவர் N. செந்தில்குமார் உள்ளிட்ட கிராம, ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், திராவிட முன்னேற்றக் கழக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியிடம் மனுவை வழங்கினர்.
சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி இந்த கோரிக்கையைத் தளபதி தலைவர் முதலமைச்சரிடமும், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களிடமும், மாவட்ட அமைச்சர் முத்துசாமி அவர்களிடமும் கொண்டு செல்வதாக உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு கீழ் பவானி பாசன வாய்க்கால் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
