கோவை மாநகராட்சி பட்ஜெட்: 'ரங்கோலி கோலம்' மற்றும் 'காலி பெருங்காய டப்பா' போல பயனற்றதாக உள்ளது: அதிமுக கவுன்சிலர்கள்..!

கோவை மாநகராட்சி பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட் ரங்கோலி கோலம் மற்றும் காலி பெருங்காய டப்பா போல பயனற்றதாக உள்ளது. மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டு தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மேயர் கல்பனா இன்று தாக்கல் செய்தார். 19 கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ள இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை எனவும், பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாகவும் அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.



கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி மாமன்ற மன்றத்தில் 5-மண்டலத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவில் வடக்கு மண்டல தலைவர் பதவிக்கு கதிர்வேல், தெற்கு மண்டலத்திற்குத் தனலட்சுமி, கிழக்கு மண்டலத்திற்கு லக்குமி இளஞ்செல்வி, மேற்கு மண்டலத்திற்குத் தெய்வானை தமிழ்மறை, மத்திய மண்டலத்திற்கு மீனா லோகு ஆகியோர் போட்டியிட்டனர்.

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு மண்டலத் தலைவர் பதவிகளை ஒதுக்கீடு செய்யாமல், நேரடியாகப் போட்டியிட்டது. வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த 5 பேரும் மண்டல தலைவர்களாகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.



தேர்வு செய்யப்பட்டவர்களுக்குக் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா சான்றிதழ்களை வழங்கினார்.



வடக்கு மண்டல தலைவராகத் தேர்வான கதிர்வேல் ஆட்டோ ஓட்டுனராக இருந்து மாமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கான தேர்தலில் 3 அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதே போல் 4 திமுக கவுன்சிலர்களும் தேர்தலுக்கு வரவில்லை. பின்னர் இந்த 7 பேரும் பட்ஜெட் தாக்கலுக்கு வந்திருந்தனர்.



இதையடுத்து கோவை மாநகராட்சியில் 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தாக்கல் செய்தார்.

கோவை மாநகராட்சியில் மொத்த வருவாய் 2317.97 கோடி உள்ள நிலையில், மொத்த செலவீனம் 2337.28 கோடி ரூபாயாக உள்ளது. 19.31 கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது. இந்த பட்ஜெட்டில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக ஒரு மண்டலத்திற்கு 10 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



இதேபோல அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பந்தயசாலை, டி.பி.சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டணம் பரிச்சாத்திய முறையில் வசூலிக்கப்படும் எனவும், சிறப்பாக பணியாற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு 'சிறந்த மாமன்ற உறுப்பினர்' விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது.



கோவை மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றன.



இதற்கு முன்னதாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை மேயர் கல்பனா வாசித்த போது, தீண்டாமையை கடைப்பிடிக்க மாட்டோம் என்பதற்குப் பதிலாகத் தீண்டாமையை கடைப்பிடிப்போம் என தவறாக வாசித்தார். இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர் அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் கூறியதாவது:-



தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை மேயர் தவறாகப் படித்தார். இது கோவை மக்களுக்கு வந்த சோதனை. கோவை மாநகராட்சி பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட் ரங்கோலி கோலம் மற்றும் காலி பெருங்காய டப்பா போல பயனற்றதாக உள்ளது. மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை. எனவே பட்ஜெட் மீதான விவாதத்தைப் புறக்கணிக்கிறோம் எனத் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...