உலகில் எந்த பகுதியிலிருந்தாலும் தமிழர் நலம் பாதுகாக்கத் தமிழக அரசு சீரிய நடவடிக்கைகளை எடுக்கும் என வெளிநாடு வாழ் நலத்துறை மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.
கோவை: உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் தமிழர் நலம் காக்கப்படும் என அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.
சாய்பாபா காலனி அருகிலுள்ள கே.கே புதூரில் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட வெளிநாடு வாழ் நலத்துறை மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் நலத்திட்ட உதவிகளை (தையல் இயந்திரம், இஸ்திரிபெட்டி, புடவை, உதவித்தொகை) வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மஸ்தான், தமிழகத்திற்கு அனுமதி இல்லாமல் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த 17-பேருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் முடிவைப் பொறுத்து தமிழக அரசு இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் நலன் குறித்து முடிவை எடுக்கும்.
உக்ரேன் மாணவர்கள் தமிழகம் கொண்டு வருவதில் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததனடிப்படையில் அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்று மாணவர்களைத் தமிழகம் அழைத்து வந்தனர். 1980 மாணவர்கள் தமிழக அரசின் சார்பில் தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சிலர் தாங்களாகவே வந்தனர். சிலர் அவர்களின் விருப்பத்தின்பால் அங்கேயே இருந்து விட்டனர். உக்ரைனிலிருந்து தமிழகம் வந்த மாணவர்களுக்கு மேற்கொண்டு மருத்துவப் படிப்பைத் தொடர மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகில் எந்த பகுதியிலிருந்தாலும் தமிழர் நலம் பாதுகாக்கத் தமிழக அரசு சீரிய நடவடிக்கைகளை எடுக்கும். அரசின் புறம்போக்கு நிலங்களில் தகுதி வாய்ந்த வீடில்லா ஏழைகளுக்கு வீடு வேண்டும் பட்சத்தில் அவர்களுக்கு வீடு வழங்க ஏற்கனவே முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அதனைச் செயலாற்றி வருகிறார்கள். உக்ரேன் விவகாரத்தில் மத்திய அரசை விட கூடுதல் கவனத்தைத் தமிழக அரசு மேற்கொண்டது.
இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 200-மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.