இந்த மாபெரும் போராட்டத்தில், இந்தியா முழுவதும் சுமார் 40 கோடி பேர் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் மத்திய அரசைக் கண்டித்து வரும் 28, 29 தேதியில் நடைபெறும் மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் சுமார் 40 கோடி பேர் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசைக் கண்டித்து வரும் 28, 29ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கூறும் போது:-
மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்தும், பொதுத்துறை சொத்துக்களை விற்பனை செய்வதை மோடி அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தொழிலாளர் நல சட்டங்கள் 44 இருந்ததை, 4 ஆக சுருக்கியதை கண்டித்தும், வரும் 28ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கோவை தெற்கு, பொள்ளாச்சி, வால்பாறை, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், சூலூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்திய தபால் அலுவலகங்கள், காந்தி சிலை மற்றும் முக்கியமான பேருந்து நிலையங்கள் பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 29ம் தேதி அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். மத்திய அரசின் காப்பீட்டுத் துறை, ரயில்வே, பாதுகாப்புத் துறை அனைத்து துறைகளிலும் நாட்டுக்குச் சொந்தமான சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுப்பதை கண்டித்து, இந்த நாடு விற்பனைக்கு அல்ல என்பதை சொல்லும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் நடைபெறும்.
குறிப்பாக, கோவையில் வெற்றிகரமாக நடைபெறும், கோவையில் ஆலைகள் இயங்காது, ஆட்டோக்கள் ஓடாது, பேருந்துகள் இயங்காது, மக்கள் நடமாட்டம் இருக்காது, கிராமப்புற மக்களும் வேலைநிறுத்தம் வெற்றி பெற செய்ய வேண்டும். அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக நடைபெறும். இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். கடந்த முறை 24 கோடி பேர் பங்கேற்றனர். இந்த முறை 40 கோடி பேர் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.