நாக்கு மற்றும் வாய்ப்பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பெண் யானை குட்டி சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திற்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை: கோவை போளுவாம்பட்டி, வனப்பகுதியில் வாயில் அடிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் யானை குட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட முள்ளங்காடு வனப்பகுதியில் அவுட்டுகாய் போன்ற வெடிபொருள் கடித்ததில் 8-எட்டு வயது மதிக்கத்தக்கப் பெண் குட்டியானைவாயில் படுகாயமடைந்தது உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் தாணிகண்டி அருகே பெண் குட்டி யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
முதல்கட்ட விசாரணையில் அவுட்டுகாய்போன்ற வெடிபொருளைக் கடித்ததால் யானைக்கு வாயில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டது.
இந்நிலையில் யானை வாயில் காயங்களுடன் கண்டறியப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்துறை அதிகாரிகள் மோப்பநாய் உதவியுடன் வெடிபொருட்கள் உள்ளதா என கண்டறியத் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக முள்ளாங்காடு அருகே உள்ள தேவராயபுரம், வெள்ளருக்கம்பாளையம், ஜவ்காடுஉள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் வளவன் மற்றும் பயிற்சியாளர்கள் உதவியுடன் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை நாட்டு வெடி பொருட்கள், வேட்டையாடப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஏதும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாக்கு மற்றும் வாய்ப்பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பெண் யானை குட்டி சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திற்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தது.