இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் அருகிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை துடியலூர் அருகே தொழிலதிபர் வீட்டில் 15 பவுன் தங்க நகை, அமெரிக்க டாலர்கள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் மணி நகர் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகன் முத்துகுமார் (43). இவர் சொந்தமாக வொயர் கட்டிங் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 18ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுப்பதற்காக இவர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
அதனையடுத்து இன்று அதிகாலை 12.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைத்து திறந்து இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் கலைந்து கிடந்தன.
மேலும், பீரோவில் வைத்திருந்த தங்க மோதிரம், வளையல், கம்மல், செயின் உள்ளிட்ட 15 பவுன் தங்க நகைகள், அமெரிக்கா டாலர்கள், லேப்டாப் ஆகியவை திருடப்பட்டு இருந்துள்ளன. தொடர்ந்து இவர் துடியலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதனையடுத்து, துடியலூர் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். பின்னர், கைரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அருகிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து சோதனை செய்து வருகின்றனர்.