அடிப்படை மற்றும் அவசர பணிகளை மேற்கொள்ள முடியாமல், சிரமப்படுவதாகவும், ஆதிக்க கவுன்சிலர்கள், பழங்குடியினத்தை சார்ந்த தன்னை கேவலமாகப் பார்ப்பதோடு, மன உளைச்சலை ஏற்படுத்தி மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
கோவை: ஆதிக்க சாதி கவுன்சிலர்கள் பணி செய்யவிடாமல் மிரட்டுவதாக, கோவை மத்வராயபுரம் ஊராட்சி தலைவர் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் மத்வராயபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கிட்டுச்சாமி. பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில் ஊராட்சி தலைவராக இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் தன்னை பணி செய்ய விடாமல் ஆதிக்க சாதி கவுன்சிலர்கள் தடுப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார். அவர் அளித்த புகாரில் தான், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால், ஆதிக்கச் சாதியைச் சார்ந்த 4 கவுன்சிலர்களோடு பழங்குடியினத்தை சார்ந்த ஒரு கவுன்சிலரும் சேர்ந்து (கவுன்சிலர்கள் மூர்த்தி, ஜோதிமணி, ராணி, நாகராஜ், முருகேஷ்) தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.
மேலும் ஊராட்சி மன்ற கூட்டத்தினை நடத்தவிடாமல் தடுத்து வருகின்றனர். கவுன்சிலர்கள் ஐந்து பேரும் தாங்கள் தேர்தலுக்கு செலவு செய்த 6 லட்சத்தை எப்படி எடுப்பது எனவும், தங்களுக்கு மாதம் தோறும் ஒரு தொகை வழங்க வேண்டும் என தன்னை மிரட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தூய்மைப்பணியாளர்கள், பிளம்பர், தண்ணீர் விடுபவர் உள்ளிட்டவர்களையும் பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். இதனால் மத்வராயபுரம் ஊராட்சியில் அடிப்படை மற்றும் அவசர பணிகளை மேற்கொள்ள முடியாமல், சிரமப்படுவதாகவும், ஆதிக்க கவுன்சிலர்கள், பழங்குடியினத்தை சார்ந்த தன்னை கேவலமாகப் பார்ப்பதோடு, மன உளைச்சலை ஏற்படுத்தி மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.