கோவை மாவட்டம் அன்னூர் அருகே அம்போதி அருகே தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், 8500 கறிக்கோழிக்குஞ்சுகள் தீயில் எரிந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், 8500 கறிக்கோழிக்குஞ்சுகள் தீயில் எரிந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள அம்போதி மஜரா சாலையூரில், கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. அங்குள்ள,.2 கோழிப்பண்ணை ஷெட்டுகளில் சுமார் 8500 கறிக்கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக தீ மளமளவென பற்றியது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்துவந்த அன்னூர்தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த சுமார் 8500 கறிக்கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியாயின.
மேலும், இவ்விபத்தில் கோழித்தீவனங்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின.இதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் அன்னூர் அல்லப்பாளையம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1800 கோழிக் குஞ்சுகள் எரிந்து நாசமான நிலையில்,இன்று மேலும் ஒரு கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் கோழிப்பண்ணை உரிமையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.