இதுகுறித்து போலீஸ் உள்ளிட்ட அனைத்து அரசு துறை உயர் அதிகாரிகள் அரசியல் கட்சியினர் தங்களது வாகன ஓட்டுநர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை விமான நிலைய நுழைவாயில் முன் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைந்ததை அடுத்து கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 500 கார்கள் நிறுத்த உதவும் வகையில் பெரிய இடவசதி கொண்ட பார்க்கிங் பகுதி ஏர்போர்ட் நுழைவாயில் முன் அமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் முதல் லேன்(First Lane) என்று சொல்லப்படும் பகுதி மிகவும் முக்கியம் வாய்ந்தது. காரணம் இந்த பகுதியில் தான் விமானநிலையத்துக்கு வருபவர்களை இறக்கிவிடவும் வந்து இறங்கியவர்களை ஏற்றிச் செல்லவும் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலும் இந்த பகுதியில் போலீஸ் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்பட்டு வந்தன.
இதன் காரணமாக விமான நிலையத்திற்கு அவசரகதியில் வரும் பயணிகள் வாகனங்களை நிறுத்தி தாங்கள் மற்றும் தங்கள் உடமைகளை எடுத்துச் செல்ல முடியாமலும் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் பயணிகள் அவர்களின் வாகனங்கள் சரியான இடத்தில் நிறுத்தி ஏறவும் அவர்களது உடமைகளை ஏற்றவும் முடியாமல் தவித்தனர்.
பெரும்பாலும் போலீஸ், அரசு வாகனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களின் வாகனங்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் இது குறித்து கேட்பதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டினர்.
நீண்ட நாட்களாக நிலவி வரும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஏர்போர்ட் நிர்வாகம் சமீபத்தில் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இதன்படி போலீஸ் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை வாகனங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களின் வாகனங்கள் எதுவும் முதல் லேன்(First Lane) என்று சொல்லக்கூடிய பகுதியில் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறினால் அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏர்போர்ட் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் தற்போது விமான நிலைய நுழைவாயில் முன் போலீஸ் மற்றும் அரசு வாகனங்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்துவது வெகுவாக குறைந்தது. ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் பழையபடி தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர்கிறது.
சுய ஒழுக்கம் மட்டுமே தீர்வு!
கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, "விமான நிலையத்தின் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள முதல் லேன்(First Lane) என்ற பகுதி பயணிகளை இறக்கி விடவும் விமானத்தில் வந்தவர்களை அழைத்துச் செல்லவும் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதிக நேரம் வாகனங்களை அப்பகுதியில் நிறுத்த யாருக்கும் அனுமதி கிடையாது. இருப்பினும் அந்த பகுதியில் போலீஸ் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை வாகனங்கள் அரசியல் கட்சியினர் வாகனங்கள் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்பட்டு வந்தன. இதனால் மற்ற பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். அரசு துறை வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே போலீஸ் உட்பட அனைத்து அரசு துறை வாகனங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களின் வாகனங்கள் அனைத்தும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். விதி மீறி செயல்பட்டால் அபராதம் விதிக்க நேரிடும். தற்பொழுது இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவது தொடர்கதையாக உள்ளது.
மிசோரம் மாநிலத்தில் சாலை போக்குவரத்து விதிகளை மக்கள் சீரான முறையில் பின்பற்றி வருகின்றனர்.
அந்த மாநிலத்தை போன்று தமிழகமும் திகழ ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சுய ஒழுக்கத்துடன் சாலை போக்குவரத்து விதிகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும். நிறுத்த கூடாத இடத்தில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவது, அபராதம் செலுத்த நேரிடும்போது வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பார்க்கிங் என ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
போலீஸ் உள்ளிட்ட அனைத்து அரசு துறை உயர் அதிகாரிகள் அரசியல் கட்சியினர் தங்களது வாகன ஓட்டுநர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.