மசினகுடி கிராமத்தில் உள்ள கோழி பண்ணை அருகில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியைக் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டலம் வனப்பகுதியில் அமைந்துள்ள மசினகுடி கிராமத்தில் உள்ள கோழி பண்ணை அருகில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிவ நஞ்சம்மாள் என்ற மூதாட்டியைக் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ளது மசினகுடி கிராமம். இந்த கிராமத்தைச் சுற்றி சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் மசினகுடி - சிங்கார சாலையில் அமைந்துள்ள கோழிப்பண்ணை என்ற பகுதியில் வசித்து வருபவர் சிவ நஞ்சம்மாள்.
இவர் இன்று மாலை சுமார் 4 மணி அளவில் அவரது வீட்டின் அருகே உள்ள சாலையோரத்தில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிவ நஞ்சம்மாளை தாக்கியது.
யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினர்க்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி இறந்த சிவ நஞ்சம்மாள் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.