மேலும், முறையாக சுழற்சி முறையில் பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை.
கோவை: டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாற்றத்தில் அமைச்சர் தலையீடு ஏற்க முடியாது என்று டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்கக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாற்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலையீடு இருக்கக் கூடாது.
சுழற்சி முறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு முறையாக சுழற்சி முறையில் பணியிட மாற்றம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அச்சங்க நிர்வாகிகள் கூறும் போது :-
டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கடந்த 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றக் கூடிய ஊழியர்களுக்கு சொந்த ஊர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தி வருகிறது.
கடந்த ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றாத நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு புதிதாக வந்துள்ள அமைச்சர் முறையான பணியிட மாற்றம் செய்யாமல் தன்னிச்சையாக 100க்கும் மேற்பட்டோருக்கு பணியிட மாறுதல் வழங்கியிருக்கிறார். இந்த பணியிட மாற்றத்தில் பணம் கைமாறி உள்ளதாக நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம்.
குறிப்பாக, ஊழியர்கள் குடும்பச் சூழல், உடல்நலம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பணியிட மாற்றத்துக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் தன்னிச்சையாக பணியிட மாற்றம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு முறைகேடாக செய்யப்பட்ட பணியிட மாறுதல்களை இரத்து செய்ய வேண்டும்.
அதேபோல், சுழற்சி முறையிலான பணியிட மாற்றங்களை அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். புதிய அரசு அமைந்தவுடன் குறிப்பாக தற்போதைய துறை சார்ந்த அமைச்சர் எங்களது கோரிக்கைகளை ஏற்கவில்லை, மதுக்கூடங்கள் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என அமைச்சர் கூறும் நிலையில், பார் உரிமையாளர்கள் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மதுக்கூடம் இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு, குடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற அக்கறை இந்த அரசிற்கு இருந்தால் மதுக்கூடங்களை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.