கிணற்றின் சுற்றுச்சுவர் மீது கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.
கோவை: கோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, 150 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வி.ஓ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு மணிகண்டன், சிவப்பிரகாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவருமே கோவை சூலூர் முத்துகவுண்டன்புதூர் பகுதியிலுள்ள தனியார் ஸ்நாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், அதே நிறுவனத்தில் பணியாற்றும் கணேஷ் என்பவரது பிறந்தநாளை முன்னிட்டு, பணி முடிந்த பிறகு இரவில் சக ஊழியர்கள் அங்கிருந்த கிணற்றின் சுற்றுச்சுவர் மீது கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது சிலர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தக் கொண்டாட்டத்தின் போது சிவபிரகாஷ், கிணற்றின் மீது ஏறிய போது, அங்கிருந்த 150 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரது அண்ணன் மணிகண்டன் உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் சிவபிரகாசத்தை மீட்க முயன்றனர். மணிகண்டன் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி காப்பாற்ற முயன்றுள்ளார்.
இதையடுத்து, சக நண்பர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய சிவபிரகாசத்தை சடலமாக மீட்டனர். மேலும், கிணற்றில் சிக்கியிருந்த மணிகண்டனை பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து, போலீசார் சிவபிரகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.