தேர்தலின்போது கூறியதுபோல் முதல்கட்டமாக பேரூர் மயானத்தை சீர் செய்யும் பணி துவக்கிய பேரூராட்சி தலைவர் அண்ணாதுரைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை: மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதல் பணியாக கோவை பேரூர் மயானத்தை சீரமைக்கும் பணிகளை துவங்கிய பேரூராட்சி தலைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை பேரூர் பேரூராட்சிக்குட்பட்ட, நொய்யல் ஆற்றங்கரை அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும், மயானத்தை அப்பேரூராட்சிக்குட்பட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், முறையாக பராமரிக்காததால் மிகவும் மோசமான நிலையில் இந்த மயானம் உள்ளது. ஒவ்வொரு முறையும் தேர்தலின் போதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் முதல்கட்டமாக பேரூர் மயானத்தை சீர் செய்து கொடுப்பதாக தெரிவித்து வந்தனர். ஆனால் இதுவரை எந்த முயற்சியும் எடுக்க வில்லை.
இந்நிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பேரூர் பேரூராட்சியில் அதிக வார்டுகளில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் பேரூராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பதவி ஏற்று முதல் பணியாக பேரூர் மயானத்திற்கு நேரில் சென்ற அவர் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், முதல் பணியாக மயானத்தை சீர்செய்யும் வேலைகளை துவங்க உள்ளதாகவும், இதையடுத்து அங்குள்ள சொர்க்க ரதத்தை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மயானத்துக்கு வரும் வழிப்பாதைகள் மிகவும் மோசமாக உள்ளதால் சீர் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இரவு நேரங்களில் ஏதாவது உயிரிழப்புகள் ஏற்பட்டால் தனியாக ஜெனரேட்டர்கள் மூலமாக மின்சாரம் கொடுத்து ஆபத்தான நிலையில் மயானம் பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் தற்போது முதல் கட்டமாக முதல் பணியாக மயானத்தை மேம்படுத்தும் வேலைகளை துவங்கி உள்ளதாக தெரிவித்தார். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அண்ணாதுரை பேசியுள்ளார்.
தேர்தலின்போது கூறியதுபோல் முதல்கட்டமாக பேரூர் மயானத்தை சீர் செய்யும் பணி துவக்கிய பேரூராட்சி தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.