கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் வனப்பகுதியில் வறட்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில், வனவிலங்குகளுக்காக தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக் கோட்டத்தில், பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய 4 சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தைப் புலி, மான்கள், சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் வசித்து வருகின்றன.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென பசுமையாக காட்சியளித்தது.
தொடர் மழை காரணமாக வனப்பகுதியில் உள்ள நீரோடைகள், தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டது. வனம் பசுமையாக இருந்ததால், வனவிலங்குகள் உணவு தேவை பூர்த்தி அடைந்து வந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால், வனப்பகுதியில் வறட்சி தொடங்கியுள்ளது. அடர் வனத்தில் உள்ள நீர் ஓடைகள் வறண்டு போனதால், உணவு மற்றும் நீருக்காக யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில், உலாந்தி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில், டாப்சிலிப் வனப்பகுதியில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து, நீர் நிரப்பும் பணிகளில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.