திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய குடோனில் பரிசு பொருட்களை வைத்திருப்பதாக திரண்ட அதிமுகவினர்.
கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்றில் பெட்டி பெட்டியாக ஹாட் பாக்ஸ் இருந்ததால் பரபரப்பு நிலவுகிறது.
கோவை மாநகராட்சி நஞ்சுண்டாபுரம் பகுதி 62வது வார்டில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குடோனில் பரிசு பொருட்களை வைத்திருப்பதாக அதிமுகவினர் அங்கு திரண்டனர்.
இது இதுகுறித்து காவல்துறையினருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்தனர்.
அப்போது, உடனடியாக கதவை திறக்க வேண்டுமென அதிமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில், தோட்டத்தின் உரிமையாளர் நீண்ட நேரமாக வராத காரணத்தினால் கதவு உடைக்கப்பட்டது. உள்ளே சுமார் 13 பெட்டிகள் இருந்தது அதில் இரண்டு பெட்டிகள் திறக்கப்பட்ட நிலையில் அதில் ஹாட் பாக்ஸ் இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, ஹாட் பாக்ஸ் உள்ளே காசுகள் இருக்க கூடும் எனவும், எனவே திறந்து காண்பிக்க வேண்டி அதிமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில் ஹாட்பாக்ஸ் திறக்கப்பட்டது.
ஆனால் அதனுள் காசு பணம் எதுவும் இல்லாததை தொடர்ந்து அதிமுகவினர் கலைந்து சென்றனர். இது குறித்து எழுந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.