விசாரணையில் அந்த பெண் மதுரை, மேலூர் பக்கம் உள்ள ஆட்டுகுளம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி என்பது தெரியவந்துள்ளது.
கோவை: கோவையில் ஃபேன்ஸி ஸ்டோருக்குள் (Fancy Store) புகுந்து வியாபாரி மனைவி முகத்தில் பூச்சிகொல்லி மருந்தை அடித்து தங்க சங்கிலி பறித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை ரத்தினபுரி ரங்கண்ண கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் ரத்தினபுரி 7-வது வீதியில் தண்டு மாரியம்மன் கோவில் அருகே ஃபேன்ஸி (fancy) கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று மதியம் இவரது மனைவி செல்வராணி (57) கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, கடைக்கு வந்த ஒரு பெண் தனக்கு வேண்டிய சில சாமான்களை எடுத்து மேஜையில் வைத்தார். அவைகளை கிப்ட் பேப்பரில் பேக்கிங் செய்து தருமாறு செல்வராணியிடம் கேட்டுள்ளார்.
அப்போது, அந்த பெண் திடீரென்று செல்வராணியை கட்டிப்பிடித்து அவர் முகத்தில் பூச்சிகொல்லி மருந்தை அடித்தார். பின், செல்வராணியின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறிக்க முயற்சி செய்தார். செய்வதறியாமல், செல்வராணி விடாபிடியுடன் அந்தப் பெண்ணுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளார்.
இருப்பினும், அந்த பெண் செல்வராணியின் கழுத்தில் இருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். செல்வராணி அவரை துரத்திக்கொண்டு சத்தம் போட்டுக்கொண்டே பின்னால் ஓடினார்.
இதையடுத்து, அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து, அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து ரத்தினபுரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், உதவி கமிஷனர் சுகுமாரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி அந்த பெண்ணை கைது செய்து, அவரிடம் இருந்து சங்கிலி பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் அந்த பெண் மதுரை, மேலூர் பக்கம் உள்ள ஆட்டுகுளம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் மீது திருப்பூரில் இதேபோல திருட்டு வழக்கு உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து, பூச்சி மருந்து அடித்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது