மேலும், சட்ட விரோதமாக நெல் கொண்டுவரப்பட்டால், அரசின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வெளிமாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக நெல் கொண்டு வருவதைத் தடுக்க பொள்ளாச்சியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நெல் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு நெல் உரிய அனுமதியின்றி கொண்டுவரப்படுவதால் தமிழக நெல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்து வந்தது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை டிஜிபி உத்தரவின் பேரில் உரிய அனுமதியின்றி தமிழகத்திற்குள் நெல் கொண்டு வருவதை சீர்படுத்தவும், அனுமதியின்றி வெளிமாநில நெல்லை வாங்கும் தொழிற்சாலைகளை கண்டறிந்து விழிப்புணர்வு அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் தனியார் நெல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு, நேற்று பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த லாரி உரிமையாளர்கள், நெல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
வெளிமாநில நெல் கொள்முதல் காரணமாக தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவதால், உரிய அனுமதியின்றி வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு நெல் மூட்டைகளை கொண்டு வரக்கூடாது என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெளிமாநில நெல் மூட்டைகள் அனுமதியின்றி கொண்டுவரப்பட்டால், அரசின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.