கோவை ஒண்டிப்புதூர் 2-வது தெரு, செந்தில் ஜனதா நகர் பகுதியில் உள்ள வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு. வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கைரேகையை, பழைய மற்றும் புதிய குற்றவாளிகளின் கை ரேகைகளுடன் போலீசார் ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை: கோவை ஒண்டிப்புதூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் சென்று 29 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடி சென்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ஒண்டிப்புதூர் 2-வது தெரு, செந்தில் ஜனதா நகர் பகுதியில் வசித்து வருபவர் சையது இப்ராஹிம் (30) இவர் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில், இவர் மாமனாருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால், அவரை பார்ப்பதற்காக குடும்பத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை ஊர் திரும்பிய அவர், வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது, மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து பீரோவை உடைத்து 29 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இப்ராஹிம், உடனே சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் வந்த போலீசார், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருட்டுப் போன வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கைரேகையை, பழைய மற்றும் புதிய குற்றவாளிகளின் கை ரேகைகளுடன் போலீசார் ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல், அந்த தெருவில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் உள்ள பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.