சிறுத்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளது சிறுத்தைக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் ஆலோசனை பெற்று சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட உள்ளோம் - கோவை மண்டல வனப்பாதுகாப்பு அதிகாரி ராமசுப்பிரமணியன்.
கோவை: கோவை குனியமுத்தூர் அடுத்த பி கே புதூர் பகுதியில் உள்ள பாழடைந்த குடோனில் கடந்த 5 நாட்களாக பதுங்கியிருந்த சிறுத்தை இன்று நள்ளிரவு வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சியை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளில் கூண்டுக்குள் வைத்திருந்த இறைச்சியை உண்ண சிறுத்தை கூண்டுக்குள் வருவதும், பின்னர் கூண்டில் இருந்த தானியங்கிகதவு தானாக அடைக்கப்படும் வீடியோ பதிவாகி உள்ளது.
சிறுத்தை பிடிபட்டது தொடர்பாக கோவை மண்டல வனப்பாதுகாப்பு அதிகாரி எஸ். ராமசுப்பிரமணியன் கூறுகையில், "தனிப்படை அமைத்து கடந்த 5 நாட்களாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வந்தது. குடோனில் இரு வாயில்களிலும் தானியங்கி கதவுகளுடன் கூடிய கூண்டு வைக்கப்பட்ட போதும், 5 நாட்களுக்கும் மேலாக உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமல் இருந்த சிறுத்தை, கூண்டுக்குள் வருவதைக் கண்காணித்து, கூண்டுக்குள் வந்தவுடன் தானியங்கிக் கதவை முன்னதாகவே இயக்கி அதனை கூண்டில் சிக்க வைத்துள்ளது.
சிறுத்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளது என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். சிறுத்தைக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் ஆலோசனை பெற்று சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட உள்ளோம். சிறுத்தையை பிடிப்பதற்கான பணியில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வனத்துறைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கினர்", இவ்வாறு அவர் தெரிவித்தார்.