தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தலில் மக்களை ஏமாற்றிய தமிழக அரசிற்குத் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - பா.ஜ.க. மூத்த நிர்வாகி எச்.ராஜா.
கோவை: தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் 1000 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளதாக, கோவையில் பா.ஜ.க. மூத்த நிர்வாகி எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் தொகுப்புடன் ரூபாய். 2500 ரொக்க தொகையாக வழங்கியபோது, ரூபாய் 5000, வழங்கக்கோரிய தற்போதைய முதல்வர், தற்போது வெறும் பொங்கல் தொகுப்பு வழங்கி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசாக மாறியுள்ளது.
மேலும், பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட மளிகை பொருட்கள் தரமற்றவையாக, கலப்படமாக இருந்துள்ளது. பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூபாய் 1000 கோடி வரை ஊழல் நடந்துள்ளது", என்றார்.
குடியரசு தின விழாவில், தமிழக சிறப்பு ஊர்திகள் புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு, தமிழக அரசு இதில் நாடகம் ஆடுவதாகவும், கடந்த 2006 மத்தியில் தி.மு.க கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த போதும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழக சிறப்பு ஊர்திகளுக்கு அனுமதி கிடைத்ததாகவும், மற்ற சில ஆண்டுகளில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
அரசுக்கும், இதற்கும் தொடர்பில்லை என கூறிய அவர், கடந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க.ஆட்சி நடைபெறும் உ.பி.அரசிற்கு வாகன ஊர்தி அனுமதி கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் பொங்கல் தொகுப்பில் மக்களை ஏமாற்றிய தமிழக அரசிற்கு, தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள், என்று எச்.ராஜா தெரிவித்தார்.