சிறுத்தையை பிடிக்க மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தால், குடோனில் உள்ள பொருட்களில் சிக்கி காயமடைய வாய்ப்புள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, 4வது நாளாக கூண்டிலேயே பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க 4 வது நாளாக வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றும், சிறுத்தை அதே குடோன் பகுதியில் தான் உள்ளது என்பதற்கு ஆதாரமாக, சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குடோனின் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து, அதில் இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஐந்து கேமிராக்கள் மூலம் சிறுத்தையின் நடவடிக்கையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து, நான்காவது நாளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், இன்று அதிகாலை நேரத்தில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அதில், அதிகாலை அளவில் சிறுத்தை குடோனுக்குள் உலா வருவதும், கேமிராவை உற்றுபார்ப்பதும், கூண்டின் அருகே சென்றுவிட்டு திரும்புவதும் போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.
மேலும், இந்த சிறுத்தை, வனத்திலிருந்து மற்றொரு பலம் வாய்ந்த சிறுத்தையால் விரட்டபட்டிருக்கலாம் எனவும், ஏற்கனவே கூண்டில் பிடிப்பட்டு வனத்தில் விடுவிக்கப்பட்ட சிறுத்தையாக கூட இருக்க கூடும் எனவும் வனத்துறையினர் சந்தேக்கின்றனர்.
மேலும், மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தால் குடோனில் உள்ள பொருட்களில் சிக்கி சிறுத்தை காயமடைய வாய்ப்புள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, நான்காவது நாளாக அதனை கூண்டிலேயே பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
