மலைப்பாதைக்கு செல்லும் நடைபாதை மற்றும் வாகனப்பாதை அடைக்கப்பட்டு உள்ளதால், பக்தர்கள் அடிவாரத்தில் நின்றபடி மருதமலையை நோக்கி "முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா", என்று போற்றி வழிபட்டனர்.
கோவை: கோவை மருதமலை சுப்ரமணியசுவாமி மலைக் கோவிலில் தைப்பூசம் திருக்கல்யாண நிகழ்ச்சி ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால், இம்முறை, அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்களின்றி கொண்டாடப்பட்டது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் மருதமலை சுப்ரமணிய கோவிலில் தைப் பூச திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்படும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பால் காவடி எடுத்து வந்து முருகனை வழிபடுவர். ஆனால், தற்போது கொரோனா காரணமாக ஜன.,14 முதல் 18 வரை கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால், தைப்பூசம் நாளான இன்று பக்தர்கள் இன்றி மருதமலை கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளிய முருகனுக்கு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து, முருகனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, திருப்புகழ் பாடலுடன் உரல் இடிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் முருகன் வள்ளி தெய்வானை ரதத்தில் வளம் வந்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதால், கோவில் குருக்கள், ஊழியர்கள், பாதுகாப்பிற்காக வந்திருந்த காவலர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள் அடிவாரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மலைப்பாதைக்கு செல்லும் நடைபாதை மற்றும் வாகனப்பாதை அடைக்கப்பட்டு, காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முருகனை நேரில் தரிசிக்க முடியாத பக்தர்கள், அடிவாரத்தில் நின்றபடி மருதமலையை நோக்கி "முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா", என்று போற்றி வழிபட்டனர்.