பல்சமய நல்லுறவு இயக்கத்தார் மற்றும் திமுகவினர் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் நிகழ்வில் இந்துக் கோயில் அர்ச்சகர், இஸ்லாமிய ஹாஜி, தேவாலய பாதிரியார் மற்றும் அனைத்து மத பெண்கள், ஆண்கள், குழந்தைகள் கலந்துக் கொண்டனர்.
கோவை: தமிழகம் முழுவதும் இன்று ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மதங்களைக் கடந்த தமிழ் இனத்தவர்களுக்கான இந்த பண்டிகையை, கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் வாழும் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்கள் சமத்துவத்துடன் ஒன்றுகூடி இன்று சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.
பல்சமய நல்லுறவு இயக்கத்தார் மற்றும் திமுகவினர் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் இந்துக் கோயில் அர்ச்சகர், இஸ்லாமிய ஹாஜி, தேவாலய பாதிரியார் மற்றும் அனைத்து மத பெண்கள், ஆண்கள் குழந்தைகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இது குறித்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர், முகமது ரஃபிக் பேசுகையில், "வட மாநிலம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மத மோதல் சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. இந்த நிலையில், தமிழகம் திராவிடத்தை தாங்கி சமத்துவத்தை நிலைநாட்டி வருகிறது. தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வரும் சமத்துவ பொங்கல், திராவிட மண் சமத்துவத்தை நிலைநாட்டுவதை மீண்டும் உலகிற்கு பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
பல ஆண்டுகாலமாக இந்த பகுதியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்த நிகழ்வு தற்போது நடைபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. சமத்துவ பொங்கல் வைத்து விவசாயிகளுக்கும் உழவர்களுக்கும் நன்றி தெரிவித்தும், சாதி மதம் மொழி கடந்து சமத்துவத்தை நிலைநாட்டவும் இந்த நிகழ்வு இந்து, இஸ்லாம், கிறிஸ்துவர்கள் இணைந்து மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது, என்றார்.