உதகை எச்.பி.எப்.(HPF) பகுதியில் ரூ.447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நீலகிரி: உதகை எச்.பி.எப்.(HPF) பகுதியில் ரூ.447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம், கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கரில் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. மலைப்பிரதேசம் என்பதால் பிற மாவட்டங்களை போல் இல்லாமல் உதகையில் கீழ் தளம் மற்றும் முதல் தளம் என்ற வடிவமைப்பில் மருத்துவ கல்லூரி கட்டப்படுகிறது.
உயிர்வேதியியல், உடல் கூறியல் பிரிவு, உடலியல் பிரிவு, நூலகப் பிரிவு, நோயியல் பிரிவு அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவு, மயக்கவியல், உயர் தொழில்நுட்ப பரிசோதனை மையம் போன்ற சிறப்பு சிகிச்சை மையங்கள் புதிய மருத்துவ கட்டிடத்தில் இடம்பெறும். மேலும், முதல்வர் குடியிருப்பு, செவிலியர் குடியிருப்பு, மாணவ-மாணவிகள் விடுதி போன்ற குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.
இவை அனைத்தும் 3 வளாகங்களாக அமைய உள்ளது. மருத்துவமனை வளாகம் 8 பிரிவுகளாக கட்டப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி, உயர்தர பிணவறைகள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், மருத்துவர்களுக்காக 1200 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கம், 108 வாகன கட்டுபாட்டு அறை உள்ளிட்டவை அடங்கும். இந்த மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பல அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.