ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் கழகம் உட்பட அனைத்து கட்சியினர் 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சாகா பயிற்சி நடைபெறும் தனியார் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் கழகம் உட்பட அனைத்து கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு கோவையில் உள்ள கல்வி நிலையங்களில் சாகா பயிற்சியை நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், இன்று விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் சாகா பயிற்சி இன்று காலை நடைபெற்றது.
அதனை கண்டிக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உட்பட அனைத்து கட்சியினர் அப் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதால் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.