இலவசமாக கிடைக்க வேண்டிய குடிநீர் வியாபார பொருளாக மாற்றப்பட்டுள்ளது. சம்பாதிக்கும் பணத்தின் 50% தண்ணீருக்காக செலவழிக்கும் நிலை உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை: அழிக்கப்பட்டு வரும் நீர் நிலைகளை பாதுகாக்க "நீர் நிலை பாதுகாப்பு சட்டம்" இயற்றக்கோரி கோவை பாமகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நீர் நிலைகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் ஆக்கிரமிப்புகளாலும், கனிம வளச்சுரண்டல்களாலும் அழிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு நீர் நிலை பாதுகாப்பு வரைவு மசோதாவை நீர் நிலை சட்டமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோவை மாவட்ட பாமகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பாமகவினர் நீர் நிலை பாதுகாப்பு வரைவு மசோதாவில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சட்ட விரோதமாக நீர் நிலைகளை ஆக்கிரமித்தும், அந்த நிலங்களை விற்று விட்டனர் என குற்றம்சாட்டினர்.
இது குறித்து மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கூறும்போது, கடந்த 30 ஆண்டுகளில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளாலும், இயற்கை வளச்சுரண்டல்களாலும் அழிக்கப்பட்டு வருகிறது. தற்போது இலவசமாக கிடைக்க வேண்டிய குடிநீர் வியாபார பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் சம்பாதிக்கும் பணத்தின் 50% தண்ணீருக்காக செலவழிக்கும் நிலை உள்ளது.
எனவே, நீர் நிலைகளை பாதுகாப்பு வரைவு மசோதாவில் உள்ள ஓட்டைகளை மாற்றியுள்ளதாகவும் அதனை தமிழக முதல்வரிடம் கொடுக்கும் முயற்சியாக மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக சட்டமாக இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதில் கோவை மாநகர பாமக இளைஞர் அணி துணை செயலாளர் ஜாய் மேகஸ்வெல், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.