இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படும் ஹெலிகாப்டரில் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவர் குடும்பத்தார் இருந்ததாக அஞ்சப்படுகிறது.
நீலகிரி: குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்புக் குழுவினர் அந்த பகுதியை நோக்கி விரைந்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு நாளை நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு கோவையிலிருந்து இரு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டரில் ஒன்று குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் என்ற பகுதியில் குடியிருப்பு பகுதியின் அருகே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர் விழுந்தவுடன் தீப்பற்றி எரிய துவங்கியது. ஹெலிகாப்டர் விழுந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து ஓடி வந்தனர்.
மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விழுந்து கிடந்த ஹெலிகாப்டரில் ஒருவர் எரிந்து பிணமாக கிடந்துள்ளார். மேலும் ஒருவர் பாதி எரிந்த நிலையில் தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .
இதுபற்றிய தகவல் குன்னூர் வெலிங்டன் ராணுவ தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டதை உடனடியாக ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை துவக்கினர். மேலும், ஹெலிகாப்டரில் எத்தனை பேர் வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியதாக கூறப்படும் ஹெலிகாப்டரில் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவர் குடும்பத்தார் இருந்ததாக அஞ்சப்படுகிறது.
மேலும், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் மருத்துவ குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.