நீலகிரியிலிருந்து கேரளாவிற்கு இன்று தமிழக அரசின் அறிவிப்பின் படி, தடையின்றி போக்குவரத்து சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரியிலிருந்து கேரளா மாநிலத்திற்கு இன்று பத்து பேருந்துகள் இயக்கப்பட்டது.
நீலகிரி: கொரோனா தொற்று காரணமாகப் பல மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் நீலகிரி, கேரளா இடையே பொது போக்குவரத்து துவங்கியது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத் தமிழகம் கேரளா இடையேயான பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரயில் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தி வந்த பயணிகள், பேருந்து போக்குவரத்து தடைப்பட்டதால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில், மீண்டும் நீலகிரியிலிருந்து கேரளாவிற்கு இன்று தமிழக அரசின் அறிவிப்பின் படி, தடையின்றி போக்குவரத்து சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரியிலிருந்து கேரளா மாநிலத்திற்கு இன்று பத்து பேருந்துகள் இயக்கப்பட்டது. உதகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து கோவை வழி மார்க்கமாகப் பாலக்காட்டிற்கும், கூடலூரிலிருந்து சுல்தான் பத்தேரி மற்றும் நாடுகானி வழியாக நிலம்பூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய பகுதிகளுக்குப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி கேரளா மாநிலம் இடையேயான பொது போக்குவரத்து சேவை தொடங்கியதையடுத்து எல்லையோர கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.