கோவையில் ஆசிரியர் பாலியல் துன்புறுத்தியாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதர் சங்கம் போராட்டம் நடத்தினர்.
கோவை: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை ஆசிரியரின் பாலியல் தொல்லையே தற்கொலைக்குக் காரணம் என குற்றச்சாட்டு - இதனைக் கண்டித்தும், மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைப்பெற்றது.
கோவை கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்தவர் மகுடேஸ்வரன். இவரது 17 வயது மகள். 17 வயது மாணவி 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி 17 வயது மாணவி, அம்மணியம்மாள் பள்ளிக்கு மாறினார்.
அந்த பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்ட 17 வயது மாணவி, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 வயது மாணவி தற்கொலைக்கு சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்தும், மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த ஆசிரியரைக் கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் ஆசிரியரின் புகைப்படத்தைக் கிழித்தெறிந்தும், செருப்பால் அடித்தும் போராட்டம் நடத்தினர்.