மூலப்பொருட்கள் விலை ஓராண்டில் 50 சதவீதம் உயர்ந்துள்ளதால், ஜாப் ஆர்டர் நன்றாக உள்ள போதிலும் நாங்கள் உற்பத்தியை அதிகரிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மூலப்பொருட்கள் விலை ஓராண்டில் 50 சதவீதம் உயர்ந்துள்ளதால், ஜாப் ஆர்டர் நன்றாக உள்ள போதிலும் நாங்கள் உற்பத்தியை அதிகரிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கோவை: கடந்த ஓராண்டில் மட்டும் மூலப் பொருட்களின் விலை 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதால் பவுண்டரி தொழிற்சாலைகளில் காஸ்டிங் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தீர்வு காண இரும்புத்தாது ஏற்றுமதிக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க பவுண்டரி தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவுண்டரி தொழிற்சாலைகளின் பங்களிப்பு
உற்பத்தித்துறை தொழில் நிறுவனங்களின் தாயாக கருதப்படுகிறது பவுண்டரி தொழிற்சாலைகள் (Mother of All Industries). பெரும்பாலான அனைத்து பொருட்கள் உற்பத்தியில் காஸ்டிங் முக்கிய மூலப்பொருளாக பயன்படுவதே, இதற்கு காரணமாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பவுண்டரி தொழிற்சாலைகள், கடந்த ஓராண்டாக மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கோவை பவுண்டரி தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்சினைகள்
கோவை மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பவுண்டரி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, காஸ்டிங் ஆர்டர்கள் அதிகம் உள்ள போதிலும் மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்(IIF), கோவை கிளைத் தலைவர், பால்ராஜ் கூறியதாவது: மூலப்பொருட்களின் கடும் விலை உயர்வு தான் பவுண்டரி தொழிற்சாலைகள் தற்போது எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினையாகும். முக்கிய மூலப் பொருட்களான pig iron, ஸ்கிராப் (scrap) உள்ளிட்டவற்றின் விலை, கடந்த ஜூலை 2020 முதல் இந்த ஆண்டு ஜூலை 2021 வரை ஒப்பிடுகையில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனால், ஜாப் ஆர்டர் நன்றாக உள்ள போதிலும் நாங்கள் உற்பத்தியை அதிகரிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழலில் பவுண்டரி தொழிற்சாலைகள் அனைத்தும் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை (No Profit, No Loss) என்ற நிலையில் தான் செயல்பட்டு வருகின்றன. இது தொழில் வளர்ச்சிக்கு உகந்ததல்ல.
என்ன தீர்வு..?
பவுண்டரி தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக இரும்புத்தாது (Iron Ore) ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் உடனடியாக பவுண்டரி தொழில் நிறுவனங்களில் பயன்படுத்த மூலப்பொருட்கள் விலை குறைந்துவிடும். பிரச்சனைக்கு இது ஒன்றுதான் தீர்வு.
எனவே, எங்கள் சங்கம் சார்பில் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். நடவடிக்கை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.