கோவை: தமிழகத்தில் எதிர்பாராமல் ஏற்படும் மின்தடையால் ஆண்டுதோறும் 200 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் வீணாகும் நிலையில், இதனை தடுக்க அரசுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கோவை: தமிழகத்தில் எதிர்பாராமல் ஏற்படும் மின்தடையால் ஆண்டுதோறும் 200 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் வீணாகும் நிலையில், இதனை தடுக்க அரசுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தித்துறை முக்கிய பங்கு வகிக்கின்றன. காற்றாலை மின் உற்பத்தி துறையை பொறுத்தவரை, தமிழகத்தில் 9 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
ஆண்டுதோறும், சராசரியாக 10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழகத்திலுள்ள காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
காற்றாலை மின் உற்பத்தி துறையில் தமிழகம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் போதிலும், எதிர்பாராமல் ஏற்படும் மின் தடை காரணமாக ஆண்டுதோறும் 200 கோடி யூனிட் மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்படுவதாக, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழக காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:
மரபுசாரா எரிசக்திதுறை அனைத்தும் இயற்கை மனிதனுக்கு கொடுத்த வரமாகவே கருதப்படுகின்றன. தமிழகத்தில் சூரியஒளி ஆற்றல் உற்பத்தி திட்டத்தின் கீழ் 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் 9,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
1000 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார உற்பத்தி வீண்
சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தி மட்டுமல்ல, தமிழகத்தில் பயோ டீசல் மற்றும் எத்தனால் தயாரிப்பு, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான மரபுசாரா எரிசக்திதுறைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இத்தனை சிறப்பம்சங்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் இயற்கையாக கிடைக்கும் மின்சாரம் வீணடிக்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. காற்றாலை மின் உற்பத்தி துறையில் மட்டும் ஆண்டுக்கு 200 கோடி யூனிட், அதாவது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார உற்பத்தி வீணாகிறது (GRID CURTAILMENT). எதிர்பாராமல் ஏற்படும் மின்தடையால் இந்த இழப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் மட்டுமே இப்பிரச்சினை..!
பல்வேறு வெளிநாடுகளிலும் இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மின் தடையால் ஏற்படும் இத்தகைய 'GRID CURTAILMENT' பிரச்சனை முற்றிலும் இல்லை. எனவே, தமிழகத்திலும் இதேபோன்ற நிலையை ஏற்படுத்த இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசுடன் இணைந்து ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழகத்தில் எதிர்வரும் ஆண்டுகளில் இயற்கையாகவே ஆண்டுதோறும் கிடைக்கும் காற்று மூலம் காற்றாலைகளில் முழுமையாக மின் உற்பத்தி செய்ய வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.