கோவை: கோவை விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் 125-கோடி ரூபாயில் புதிதாக (Departure Terminal) கட்டடம் அமைக்க விடப்பட்ட டெண்டர் மற்றும் ப்ரீபெய்ட் டாக்ஸி டெண்டர் இரண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் 125-கோடி ரூபாயில் புதிதாக (Departure Terminal) கட்டடம் அமைக்க விடப்பட்ட டெண்டர் மற்றும் ப்ரீபெய்ட் டாக்ஸி டெண்டர் இரண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில்(Arrival Terminal Building)சர்வதேச தர அந்தஸ்து கேட்க கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பயணிகள் புறப்பாடு பகுதி இன்று வரை பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
விமான நிலையத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கு முன் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 30 லட்சமாக அதிகரித்தது. இதைக் கருத்தில் கொண்டு பயணிகள் புறப்பாடு பகுதி அமைந்துள்ள பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய புறப்பாடு டெர்மினல் கட்டிடம் (New Departure Terminal Building) 125 கோடி ரூபாயில் அமைக்க கடந்த மார்ச் 2021ல் முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டெண்டர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் திடீரென இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடம் அனைத்து மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதேபோல் பயணிகள் புறப்பாடு பகுதியில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாகச் சர்வதேச தர அந்தஸ்துக்கு ஏற்ப கட்டடம் அமைக்கப்படும் என ஆவலுடன் காத்திருந்த விமான பயணிகளுக்கு டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்போர்ட் ப்ரீபெய்ட் டாக்ஸி டெண்டரும் ரத்து:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானத்திலிருந்து தரை இறங்கியவுடன் பல்வேறு இடங்களுக்குச் செல்ல ப்ரீபெய்ட் டாக்ஸி வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
அதற்கான அலுவலகம் வருகை டெர்மினல் வளாகத்தில் செயல்பட்டு வந்தது. டெண்டர் காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் டெண்டர் வெளியிடப்பட்டது. தற்போது அந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிய உடன் ஒவ்வொருவரும் அவர்களுக்கு தேவையான வாகன வசதியை அவர்களாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சிலர் தங்களுடைய சொந்த வாகனங்களில் சென்றுவிடுகின்றனர். மேலும் பலர் கோவையில் இயங்கி வரும் பல்வேறு கால்டாக்சி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் கூறியதாவது:-
"புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்ட புறப்பாடு டெர்மினல் கட்டுமான பணி டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரீபெய்டு டாக்ஸி டெண்டரில் பங்கேற்றவர்கள் விதிமுறைப்படி தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய காரணத்தால் அந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது."
இவ்வாறு அவர் கூறினார்.