கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து விமான நிலைய இயக்குநர் மற்றும் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் இன்று இரண்டு மணி நேரம் கள ஆய்வு செய்தனர்.
கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து விமான நிலைய இயக்குநர் மற்றும் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் இன்று இரண்டு மணி நேரம் கள ஆய்வு செய்தனர்.
கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களை சேர்ந்த 7-மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது.
வேகமாக வளர்ந்து வரும் நகரமான கோவையில், விமான நிலையத்தின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 2010 திமுக ஆட்சியில் விமான நிலைய விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 627-ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த திட்டத்தில் ஓடுபாதை 12-ஆயிரம் அடியாக அதிகரித்தல் தவிர சர்வதேச விமான நிலையத்துக்கான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த திட்டத்தைச் செயல்படுத்த போதிய நிதியுடன் விமான நிலைய ஆணையம் தயார் நிலையில் உள்ள நிலையில் விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிலம் விமான நிலையத்துக்குத் தமிழக அரசு சார்பில் இன்று வரை ஒப்படைக்கப்படவில்லை.
கடந்த 10-ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்த திட்டம் தற்பொழுது திமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைந்துள்ளதை அடுத்து புத்துயிர் பெறத் தொடங்கியது.
முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களின் கவனத்துக்கு விமான நிலைய விரிவாக்கத்தின் அவசியம் குறித்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்ற பின் கோவையில் கடந்த சில மாதங்களாக வருகை தந்த அமைச்சர்களிடம் இங்குள்ள தொழில் துறையினர் சார்பில் இக்கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு அடுத்து தற்போது விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கான நில ஆர்ஜித பணிகள் வேகமெடுத்து உள்ளன.
இதுகுறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறியதாவது:-
"கோவை விமான நிலையத்தில் விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிலங்களை ஆர்ஜிதம் செய்வது தொடர்பாக நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் நடந்தது. அதில் நான் பங்கேற்றேன்.
அதைத்தொடர்ந்து இன்று காலை, 2 மணி நேரம் ஆட்சியர் சமீரன் அவர்களும் நானும் இணைந்து விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு ஆர்ஜிதம் செய்யப்பட உள்ள நிலங்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம்.
மாவட்ட நிர்வாகமும் தற்பொழுது இந்த திட்டத்தைத் துரிதமாகச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோவை விமான நிலையத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டியது மிக அவசியம்.
அதற்கு எங்களால் முடிந்த அனைத்து உதவியையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.