கோவை: தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை பல்வேறு சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும் சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டவும் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
கோவை: தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை பல்வேறு சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும் சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டவும் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
அதில் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிலுள்ள முக்கியமான சில சுற்றுலாத் தலங்களில் சாகச சுற்றுலாவை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சமீபத்தில் சாகச சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் திருமூர்த்தி மலை பகுதியை சாகச சுற்றுலா நடவடிக்கை செய்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட ஆய்வை மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்தகுமார் அவர்கள் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுடன் மேற்கொண்டார்.
திருமூர்த்திமலை அணைப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சாகச சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ள நிலம் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டுள்ளது. விருது தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் மூலம் சாகச சுற்றுலா திருமூர்த்திமலை அணைப்பகுதியில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருமூர்த்தி மலை பகுதியில் ஏற்கனவே Camp Splendour என்ற பெயரில் தனியார் அமைப்பு நீர் சார்ந்த சாகச சுற்றுலாவை நடத்தி வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வசதிகள் குறித்தும் இதுபோன்ற தனியார் அமைப்புகள் நடத்தும் சாகசச் சுற்றுலா நடவடிக்கைகளை அரசே ஏற்று நடத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் ஆய்வு செய்தார்.
இதில் சிறப்பம்சம் என்னவெனில் மாவட்ட சுற்றுலா அதிகாரியான அரவிந்த குமார் அவர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் மனநிலை கருத்தில்கொண்டு, தனியார் நிறுவன பாதுகாப்பு முறைகளையும், முதலுதவி குறித்தான செயல் விளக்கங்களையும், அவர்கள் கையாளும் உபகரணங்களையும் நேரடியான செயல் விளக்கத்தையும் நேரில் பார்வையிட்டார்.
மேலும், கையாக் என்னும் தனிநபர் பைபர் துடுப்பு படகு மூலம் அணைக்கட்டு நீர்தேக்கப் பகுதியில் பயணம் மேற்கொண்டு தன் அனுபவத்தை முகநூல் மூலம் நேரலையில் பகிர்ந்து கொண்டார். மாவட்ட சுற்றுலா அதிகாரி அவர்களின் முகநூலை பின்பற்றும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சாகச சுற்றுலாவை நேரில் கண்டு களித்தனர். மாவட்ட சுற்றுலா அதிகாரி அவர்களுக்கு செயல்பாட்டிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்த் குமார் அவர்களின் சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகள் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆர்வலர்களின் மத்தியில் நன்மதிப்பையும், சிறந்த வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்த சாகச சுற்றுலா நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மற்றும் கையாக் தனிநபர் துடுப்பு படகு பயணத்தின் போது மாவட்ட சுற்றுலா துறை அதிகாரியுடன் சுற்றுலா ஆர்வலர்கள் அடங்கிய திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுவின் உறுப்பினர்களான ஜவஹர், சண்முகம், பிரசாந்த், சையது முகமுது, பொன்ராஜ், விஜயராஜேஸ் மற்றும் தனியார் சாகச நிறுவன இயக்குனர் ஜெய்சங்கர் மற்றும் பயிற்சி மற்றும் பாதுகாப்பு வீரர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.